புதுடெல்லி,
இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்திய 13வது மகளிர் ஒன்றுநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் 8 அணிகள் பங்கேற்றன. இதில் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.
இந்திய அணியில் மேற்கு வங்காளத்தை சேர்ந்த ரிச்சா கோஷ் முக்கிய வீராங்கனையாக விளங்கினார். இறுதிப் போட்டியில் அவர் அதிரடியாக 34 ரன்கள் எடுத்தார். மொத்தமாக 8 இன்னிங்சில் 235 ரன்கள் பதிவு செய்து, அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பு செய்தார்.
அவரது சாதனையை பாராட்டும் வகையில் மேற்கு வங்கம் கிரிக்கெட் சங்கம் சார்பில் 34 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும், தங்க பேட் மற்றும் தங்க பந்து ஆகியவையும் வழங்கப்பட்டன. மேலும், ரிச்சா கோஷுக்கு காவல்துறையில் டி.எஸ்.பி. பதவி வழங்கப்படும் என மாநில முதல்வர் மம்தா பானர்ஜி முன்னர் அறிவித்திருந்தார்.
அதன்படி, இன்று ரிச்சா கோஷ் மேற்கு வங்காளம் சிலிகுரி பகுதியில் காவல் துணை ஆணையர் (DSP) பொறுப்பை முறையாக ஏற்றார்.