புதுடெல்லி: பீகார் மாநிலத்தில் மொத்தம் 243 சட்டசபை தொகுதிகள் உள்ளன. நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில், நிதிஷ்குமார் தலைமையிலான என்டிஏ கூட்டணி 202 தொகுதிகளை வென்று அமோக வெற்றி பெற்றது. இதன் பின்னர், ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ்குமார் மீண்டும் முதல்வராக பதவியேற்றார்.
அரசியலில் அவர் அளித்த ஈடு இணையற்ற பங்களிப்பை முன்னிட்டு, லண்டனில் உள்ள உலக சாதனைப் புத்தகம் நிதிஷ்குமாரை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது. சுதந்திர இந்தியாவில் ஒரே மாநிலத்தின் முதல்வராக 10 முறை பதவியேற்ற ஒரே நபர் என்ற பெருமை அவருக்கு கிடைத்துள்ளது. இந்த விவரத்தை ஐக்கிய ஜனதா தளம் தேசிய செயல் தலைவர் சஞ்சய்குமார் ஜா வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டதாவது: “10வது முறையாக முதல்வராக பதவியேற்றுள்ள நிதிஷ்குமார் அடைந்த அசாதாரண மைல் கல்லை World Book of Records அங்கீகரித்துள்ளது என்பது மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிக்கிறது. இது இந்திய ஜனநாயகப் பயணத்தில் அரிய சாதனை.
பீகார் மக்களின் நம்பிக்கையின் பிரதிபலிப்பாகும். பத்து முறை ஒரு மாநிலத்தை வழிநடத்துவது என்பது வெறும் தனிப்பட்ட சாதனை மட்டுமல்ல; பீகாரின் ஜனநாயக வலிமைக்கு ஒரு சான்றாகவும், வரலாற்று தருணமாகவும் திகழ்கிறது. மாநிலத்தின் முன்னேற்றத்திற்கு தொடர்ந்து வழிகாட்டும் அர்ப்பணிப்புள்ள தலைவரை போற்றுவோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.