ரோம்: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வாடிகன் நகரில் ‘ஏழைகளுடன் இசை நிகழ்ச்சி’ என்ற பெயரில் இசைத் திருவிழா நடைபெற்றது. இந்த விழாவில் போப் லியோ பங்கேற்று நிகழ்ச்சியை கண்டுகளித்தார்.

போப் பிரான்சிஸ் முயற்சியால் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி, தற்போது 6-வது ஆண்டாக உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. கனடாவைச் சேர்ந்த மைக்கேல் பப்லே உள்ளிட்ட பல புகழ்பெற்ற இசைக்கலைஞர்கள் கலந்து கொண்டு கச்சேரிகளை அரங்கேற்றினர். வீடற்றோர், புலம்பெயர்ந்தோர், சிறப்பு அனுமதி பெற்ற கைதிகள் உள்ளிட்டோருக்கு இசை அனுபவத்தை வழங்குவதே இந்த நிகழ்ச்சியின் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சி குறித்து போப் லியோ உரையாற்றுகையில், “இது ஒரு சாதாரண இசை நிகழ்வு அல்ல; அதைவிட உயர்ந்த செயல். ஆன்மீக இசை ஆன்மாவை உயர்த்தும் சக்தி கொண்டது. மனித கண்ணியம் என்பது பொருளாதாரத்தை சார்ந்தது அல்ல. நாம் அனைவரும் கடவுளால் நேசிக்கப்படும் குழந்தைகள்” என்று கூறினார்.