சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தின் பல இடங்களில், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி–மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னறிவிப்பு வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், மாநிலத்தின் 20 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, திருவள்ளூர் மாவட்டம் மற்றும் வட சென்னை பகுதிகளில் இடி–மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இடி–மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது.
அதேபோல், அரியலூர், கோயம்புத்தூர், கடலூர், திண்டுக்கல், கன்னியாகுமரி, மதுரை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, தென்காசி, தஞ்சாவூர், தேனி, திருவாரூர், திருச்சி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இடி–மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.