புதுடெல்லி:

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஈரான்இஸ்ரேல் மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், அதன் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டதாக வெளிவந்த தகவல்களைத் தொடர்ந்து பல்வேறு இடங்களில் கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன.

இந்தியாவில் ஜம்மு காஷ்மீர், கர்நாடகா, தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் ஷியா முஸ்லிம் ஜமாஅத் அமைப்புகள் சார்பில் அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்டு பேரணி மற்றும் போராட்டங்கள் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த போராட்டங்களில் ஈரானுக்கு ஆதரவு தெரிவிக்கும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. சில இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், நாட்டில் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகலாம் என்ற முன்னெச்சரிக்கையாக உள்துறை அமைச்சகம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. ஈரான்–இஸ்ரேல் போர் தொடர்பாக இந்தியாவில் நடைபெறும் போராட்டங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பரவும் தகவல்களை தீவிரமாக கண்காணிக்க மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் காவல்துறை தலைமை இயக்குநர்கள் (டிஜிபி) ஆகியோருக்கு உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பி, சட்டம்-ஒழுங்கை உறுதிப்படுத்த தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி கேட்டுள்ளது. குறிப்பாக வன்முறை அல்லது மத அடிப்படையிலான பதற்றம் உருவாகாத வகையில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு, நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. சர்வதேச நிகழ்வுகள் இந்தியாவில் தாக்கம் ஏற்படுத்தாதபடி மத்திய மற்றும் மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன என அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.