தெஹ்ரான்,
ஈரான் நாட்டில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் அரசுக்கு எதிரான போராட்டங்கள் காரணமாக அந்நாட்டின் அரசியல் மற்றும் பாதுகாப்பு சூழல் தீவிரமாக மாறியுள்ளது. அதிகரித்துள்ள பணவீக்கம், அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, குடிநீர் மற்றும் மின்சார தட்டுப்பாடு ஆகியவை மக்களிடையே பெரும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது. இதன் தொடர்ச்சியாக, மக்கள் அரசுக்கு எதிராக திரண்டு தெருக்களில் இறங்கி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் 28-ஆம் தேதி தொடங்கிய இந்த போராட்டங்கள், தற்போது ஈரானின் 30-க்கும் மேற்பட்ட மாகாணங்களில் உள்ள 100-க்கும் அதிகமான நகரங்களுக்கு பரவியுள்ளது. போராட்டங்களை கட்டுப்படுத்த அரசு பாதுகாப்புப் படைகளை களமிறக்கியது. இதையடுத்து ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர். வன்முறை அதிகரிப்பதை தடுக்கும் நோக்கில், பல பகுதிகளில் இணைய சேவைகள் முடக்கப்பட்டன. நிலைமை சீராகிய பின்னர் இணைய சேவை மீண்டும் வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. அரசு கட்டுப்பாட்டில் உள்ள சில ஊடகங்களுக்கு மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
நார்வேயை தலைமையிடமாக கொண்ட மனித உரிமைகள் அமைப்பு ஒன்றின் தகவலின்படி, இந்த போராட்டங்களில் ஈடுபட்டவர்களில் 3,500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 10,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அரசுக்கு எதிராக செயல்படுவோர் வன்முறையில் ஈடுபடுவதாகவும், பொதுச் சொத்துகளை சேதப்படுத்துவதாகவும், கடவுளுக்கு எதிராக போர் செய்வதாகவும் அரசு குற்றம் சாட்டியது. இதன் காரணமாக, கைது செய்யப்பட்டவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படலாம் என்ற அச்சம் எழுந்தது.
இந்த சூழலில், ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் சையது அப்பாஸ் அராக்சி, போராட்டக்காரர்களை தூக்கிலிடும் திட்டம் எதுவும் இல்லை என விளக்கம் அளித்தார். இருப்பினும், இந்த விவகாரம் சர்வதேச அளவில் பெரும் கவனத்தை பெற்றது.
இதற்கிடையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செய்தியாளர்களிடம் பேசும்போது, “ஈரானில் 800 பேரை தூக்கில் போட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அந்த திட்டம் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. இது பாராட்டத்தக்க முடிவு” என தெரிவித்தார். இதற்கு முன்னர், போராட்டக்காரர்களின் படுகொலை நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறியிருந்தார்.
இதனிடையே, ஈரானில் நிலவும் பாதுகாப்பு சூழலை கருத்தில் கொண்டு, அந்நாட்டில் வசித்து வரும் இந்தியர்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றும், அவசரமில்லாதவர்கள் ஈரானை விட்டு வெளியேறுவது பாதுகாப்பானது என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்திய தூதரகத்தின் வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறும் இந்தியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.