புதுடெல்லி,

இந்தியா–ரஷியா இடையேயான 23வது இருதரப்பு உச்சி மாநாடு டெல்லி ஐதராபாத் இல்லத்தில் நடைபெற்றது. பின்னர் இரு நாடுகளின் தலைவர்களும் செய்தியாளர்களுக்கு கூட்டு பேட்டி அளித்தனர்.

முதலில் பிரதமர் மோடி பேசும்போது,
“பயங்கரவாதத்தை எதிர்க்க உலகளாவிய ஒற்றுமை அவசியம். பயங்கரவாதம் என்பது மனிதகுலத்தின் மீது நேரடி தாக்குதல். பகல்காம் தாக்குதல், குரோக்ஸ் நகர கோழைத்தனத் தாக்குதல் – எல்லாவற்றிற்கும் காரணம் பயங்கரவாதமே. இதற்கு எதிரான போராட்டத்தில் இந்தியா மற்றும் ரஷியா தோளோடு தோள் நின்று வருகின்றன” என்றார்.

அதன்பின் ரஷ்ய அதிபர் புதின் பேசியதாவது:

“இந்திய ஜனாதிபதி மற்றும் பிரதமர் வழங்கிய அன்பான வரவேற்புக்கும் உபசரிப்புக்கும் நன்றி. ரஷ்ய தூதுக்குழுவுக்கு வழங்கப்பட்ட விருந்தோம்பலுக்கும், இரவு விருந்துக்காகவும் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

ரஷியாவும் பெலாரஸும் இணைந்து, இந்தியப் பெருங்கடல் வழியாக சர்வதேச வடக்கு–தெற்கு போக்குவரத்து வழித்தடத்தை தொடங்க உள்ளோம். புதிய சர்வதேச போக்குவரத்து மற்றும் தளவாட (logistics) வழித்தடங்களை உருவாக்கிக்கொள்ளவும் இணைந்து பணியாற்றுவோம்.

கூடங்குளத்தில் இந்தியாவின் மிகப்பெரிய அணுமின் திட்டத்தை நாங்கள் செயல்படுத்தி வருகிறோம். மொத்தம் 6 அணு உலைகளில் 2 உலைகளில் ஏற்கனவே மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இத்திட்டங்கள் இந்திய தொழில்களுக்கும் வீடுகளுக்கும் மலிவான, சுத்தமான மின்சாரத்தை வழங்கும். இந்த உலைகளை முழு திறனுடன் இயக்குவது, இந்தியாவின் எரிசக்தி தேவையை பூர்த்தி செய்ய உதவும்.

கடந்தாண்டு இந்தியா–ரஷியா வர்த்தகம் 12 சதவீதம் அதிகரித்து சாதனை படைத்துள்ளது. இவ்வாண்டும் இருதரப்பு வர்த்தகம் 100 பில்லியன் டாலர் அளவை எட்டும் என கணிக்கப்படுகிறது. இரு நாடுகளுக்கிடையில் சுதந்திர வர்த்தக மண்டலம் அமைப்பது வணிக வளர்ச்சியை மேலும் ஊக்குவிக்கும்.

அமெரிக்காவுக்கு எண்ணெய் வாங்குவதில் எந்தத் தடையும் இல்லையெனில், இந்தியாவுக்கும் அத்தகைய உரிமை இருக்காதா? இந்த விவகாரத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் விவாதிக்க நாங்கள் தயாராக உள்ளோம்.”

இவ்வாறு புதின் தெரிவித்துள்ளார்.