டெல் அவிவ்:
மேற்காசியாவில் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்தியதாக கூறப்படும் வான்வழி தாக்குதல்கள் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளன. பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், ஈரானின் பாதுகாப்புத்துறை அமைச்சர் அமீர் நசீர்ஜடே, புரட்சிகர காவல்படை தளபதி முகமது பாக்பூர் உள்ளிட்ட பல உயர்மட்ட ராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி மற்றும் அவரது குடும்பத்தினரும் இந்த தாக்குதலில் உயிரிழந்ததாக வெளிவந்த தகவல்கள் மத்திய கிழக்கில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை ஈரான் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், 40-க்கும் மேற்பட்ட மூத்த ராணுவ அதிகாரிகள் உயிரிழந்ததாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலுக்கு பதிலடியாக, லெபனானில் செயல்படும் ஈரான் ஆதரவு அமைப்பான ஹிஸ்புல்லா, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இதற்கு இஸ்ரேலும் கடுமையான பதிலடி கொடுத்துள்ளது. இந்த மோதலில் 31 பேர் உயிரிழந்ததாக லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் 149 பேர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் தெற்கு லெபனானை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.
இஸ்ரேல் பாதுகாப்புப் படை வெளியிட்ட அறிக்கையில், “வெல்ல முடியாத போரில் ஹிஸ்புல்லா தானாகவே நுழைந்துள்ளது. அவர்களின் கட்டுப்பாட்டு மையங்கள், ஏவுதளங்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் தங்கியிருந்த இடங்கள் உள்ளிட்ட முக்கிய தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் இஸ்ரேல் கத்ஜ், “ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் நயீம் காசிம் இஸ்ரேலின் தாக்குதலுக்கான அடுத்த இலக்காக உள்ளார்” என எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த அறிக்கை மத்திய கிழக்கில் மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா, அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டதற்கு பதிலடி நடவடிக்கையாக இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, இரு தரப்பினருக்கும் இடையே தொடர்ச்சியான தாக்குதல் மற்றும் பதிலடி சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த பரிமாற்றத் தாக்குதல்கள் மத்திய கிழக்கில் விரிவான போர் வெடிக்கும் அபாயத்தை உருவாக்கியுள்ளது. சர்வதேச சமூகம் அமைதி வேண்டி அழைப்பு விடுத்தாலும், நிலைமை மேலும் தீவிரமடையும் சாத்தியம் உள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
மொத்தத்தில், ஈரான்–இஸ்ரேல் மோதல் புதிய பரிமாணத்தை எட்டியுள்ள நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கைகள் உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளன.