இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, மைதானத்தில் மட்டுமல்லாமல், தனிப்பட்ட வாழ்க்கையிலும் ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாட்டின் அடையாளமாக பார்க்கப்படுகிறார். அவரின் மனைவி ரிவாபா ஜடேஜா, தற்போது குஜராத்தில் மந்திரியாக பணியாற்றி வருகிறார். அரசியல் துறையில் தன்னுடைய தனித்துவமான பயணத்தை உருவாக்கி வரும் ரிவாபா, சமீபத்தில் நிகழ்ந்த ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய கருத்துகள் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

அந்த நிகழ்வில், தனது கணவர் ரவீந்திர ஜடேஜாவின் ஒழுக்கத்தைப் பற்றி பேசும் போது, இந்திய கிரிக்கெட் அணியின் பிற வீரர்களை ஒப்பிட்டு கூறிய கருத்துகள் பலரது கவனத்தையும் விமர்சனத்தையும் ஈர்த்துள்ளது. ரிவாபா கூறியதாவது: “எனது கணவர் ரவீந்திர ஜடேஜா, தனது விளையாட்டு காரணமாக லண்டன், துபாய், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு பயணம் செய்ய வேண்டியிருக்கிறது. ஆனால், அவர் தனது பொறுப்புகளை நன்கு புரிந்துகொள்வதால், எந்தவிதமான தீய செயல்களிலும் ஈடுபட்டதில்லை. அவர் எப்போதும் குடும்பத்தையும் கலாசாரத்தையும் முன்னிலைப்படுத்துபவர்.”

இதனைத் தொடர்ந்து, அணியின் பிற வீரர்களை குறித்தும் அவர் கருத்து தெரிவித்தார். “அதேநேரத்தில், அணியில் உள்ள மற்ற அனைவரும் பல்வேறு தீய செயல்களில் ஈடுபடுகிறார்கள். ஆனால் அவர்களது குடும்பத்தினரிடமிருந்து எந்தவிதமான கட்டுப்பாடோ, தடையோ இல்லை. வாழ்க்கையில் முன்னேறும்போது நமது கலாசார வேர்களை மறக்காமல் இருப்பது மிகவும் முக்கியம்,” என்று அவர் கூறினார்.

இந்த கருத்துகள் வெளிவந்தவுடன், சமூக வலைதளங்களில் பெரும் விவாதம் எழுந்துள்ளது. ரிவாபாவின் கருத்து, முழு இந்திய அணியையும் ஒரே கோட்டில் நிறுத்தி குற்றம் சாட்டுவதாக பலர் விமர்சிக்கின்றனர். சிலர், ஒரு பொது நபராகவும், ஒரு மந்திரியாகவும் இருக்கும் நிலையில், இத்தகைய பொதுவான குற்றச்சாட்டுகள் தவிர்க்கப்பட வேண்டியவை எனக் கூறுகின்றனர். அதேசமயம், சிலர் ரிவாபாவின் கருத்தை அவரது தனிப்பட்ட பார்வையாகக் கருதி ஆதரிப்பவர்களும் உள்ளனர்.

ரிவாபாவின் இந்த பேச்சு தற்போது கிரிக்கெட் வட்டாரத்திலும், அரசியல் வட்டாரத்திலும் பேசுபொருளாக மாறியுள்ளது. ஜடேஜா அல்லது இந்திய கிரிக்கெட் வாரியம் இதுகுறித்து எந்த பதிலும் வெளியிடாத நிலையில், இந்த சர்ச்சை இன்னும் சில நாட்கள் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.