“ஜன நாயகன்” படம் லீக்: பைரசி பொழுதுபோக்கு இல்லை, திட்டமிட்ட திருட்டு – குஷ்பு

நடிகரும், தமிழ் வெற்றி கழகத் தலைவருமான விஜய், “ஜன நாயகன்” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தத் திரைப்படத்தை கே.வி.என். புரொடக்ஷன் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. இத்திரைப்படத்திற்கு தணிக்கை சான்று பெற விண்ணப்பிக்கப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கை வாரிய குழு, மதம் மற்றும் பாதுகாப்பு படை தொடர்பான காட்சிகள் இடம் பெற்றுள்ளதால், இந்தத் திரைப்படத்தை மறுஆய்வு குழு பரிசீலனைக்கு பரிந்துரைத்தது.

பல நாட்களாக நீண்ட போராட்டம் நடைபெற்ற பிறகு, “ஜன நாயகன்” படத்திற்கு மறுதணிக்கை செய்ய வேண்டும் என்று தணிக்கை வாரியத்திற்கு படத் தயாரிப்பு நிறுவனம் மீண்டும் படத்தை அனுப்பியது. தமிழ்நாடு சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகிய பிறகு, மே மாதத்தின் இரண்டாவது வாரத்தில் “ஜன நாயகன்” திரைப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டது. ஆனால், அதற்குள் படம் இணையத்தில் சட்டவிரோதமாக லீக் ஆனது.

நேற்று மாலை முதல், “ஜன நாயகன்” படத்தின் சில காட்சிகள் இணையத்தில் மர்ம நபர்களால் வெளியிடப்பட்டன. இன்று அதிகாலை, மூன்று மணிநேரம் கொண்ட முழுத் திரைப்படமும் இணையத்தில் வெளியானது. இதனால் படத் தயாரிப்பு நிறுவனமும், படக்குழுவினரும், விஜய்யின் ரசிகர்களும் பேரதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர். “ஜன நாயகன்” படம் இணையத்தில் வெளியானதை கண்டித்து நடிகர் சிவகார்த்திகேயன், சிரஞ்சீவி உள்ளிட்ட திரைபிரபலங்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகை குஷ்பு இதுகுறித்து கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார். “பைரசி என்பது பொழுதுபோக்கு அல்ல, அது ஒரு திட்டமிட்ட திருட்டு” என்று அவர் தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார். பைரசியில் ஈடுபடுபவர்களை சாதாரண குற்றவாளிகளாக நினைத்தால் போதும் என்று பார்க்க முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார். “ஜன நாயகன்” படம் கசிந்தது என்பது, அதில் உழைத்த ஒவ்வொரு கலைஞர், தொழில்நுட்ப நிபுணர், மற்றும் தொழிலாளர்களின் உழைப்புக்கு நேர்ந்த கொடூரமான துரோகம் என அவர் வலியுறுத்தினார். இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு கொடுமை, இதில் நியாயப்படுத்துவதற்கு எந்த காரணமும் இல்லை என்று குஷ்பு தெரிவித்தார். சினிமாவை உண்மையாக மதிக்கிறார்கள் என்றால், பைரசியை முழுமையாக மறுக்க வேண்டும்; படைப்பாளிகளுக்கு ஆதரவாக நிற்கவேண்டும்; நேர்மையுடன் நிற்க வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார்.