முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தனது அலுவலகத்தில் ஜெயலலிதாவின் புகைப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், கடந்த வாரம் நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ கட்சியில் இணைந்து, நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் கொங்கு மண்டல அமைப்பு செயலாளர் பொறுப்புகளைப் பெற்றார்.
இதனைத் தொடர்ந்து, கோபி அருகே கரட்டூரில் உள்ள அவரது அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனரில் விஜய் புகைப்படத்துடன், முன்னாள் முதல்வர்கள் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் படங்களும் இணைக்கப்பட்டிருந்தது. இது அதிமுகவினர் மத்தியில் விமர்சனத்திற்குள் ஆளானது.
இந்நிலையில், இன்று ஜெயலலிதாவின் 9ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, தனது அலுவலகத்தில் உள்ள ஜெயலலிதா புகைப்படத்திற்கு செங்கோட்டையன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
மேலும், நினைவு தினத்தை முன்னிட்டு எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில் கூறியிருந்தது:
“மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்று வாழ்ந்த அவரது வாழ்வு முழுதும், மக்களுக்கான நலனில் தன்னை அர்ப்பணித்த புரட்சித்தலைவி அம்மா. நாட்டின் அனைத்து மக்களும் வளமாக வாழ வேண்டும் என்பதில் தவமிருந்த இதயத் தெய்வமான ஜெயலலிதாவின் நினைவு நாளில், அவரின் தியாகங்களையும் பெரும் புகழையும் பணிவுடன் போற்றி வணங்குகிறேன்.”