பெங்களூரு: கர்நாடக மாநிலம் கலபுரகி நகரில் உள்ள பல்கலைக்கழக போலீஸ் எல்லைக்குள், சுனிதா என்ற பெண் கடந்த மாதம் 22ஆம் தேதி வேலைக்குச் செல்ல பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்தார். அப்போது ஆட்டோவில் வந்த கல்லப்பா மற்றும் சந்தோஷ், லிப்ட் கொடுப்பது போல நடித்து அவரை அழைத்துச் சென்றனர்.

பின்னர் மக்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் ஆட்டோவை நிறுத்தி, கத்தியை காட்டி மிரட்டி சுனிதா அணிந்திருந்த தங்கத் தாலியை பறித்துச் சென்றனர். உடனடியாக சுனிதா பல்கலைக்கழக போலீசில் புகார் அளித்தார்.

வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி, சம்பவத்தில் ஈடுபட்ட இரு வாலிபர்களையும் கைது செய்தனர். விசாரணையில், கலபுரகி மாவட்டம் அப்சல்புராவைச் சேர்ந்த சஞ்சு பூஜாரி எனும் கல்லப்பா (24) தொழிலாளியாக பணியாற்றி வந்ததும், திருமணம் செய்யாமல் ஒரு இளம் பெண்ணுடன் கணவன்–மனைவியாக வசித்து வந்ததும் தெரியவந்தது.

அவரது வருமானம் அன்றாட செலவுகளுக்கு போதாமல் இருந்ததால், வேலை முடிந்தபின் பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டினார். பின்னர் காதலியுடன் ஆடம்பரமாக வாழும் ஆசையால், நண்பர் சந்தோஷுடன் சேர்ந்து திருட்டு, வழிப்பறி, கொள்ளை போன்ற குற்றங்களில் ஈடுபட்டது வெளிச்சத்துக்கு வந்தது.

மேலும், இவர்கள் மீது கலபுரகி பல்கலைக்கழக போலீஸ் எல்லைக்குள் 5 வீடுகளில் நடந்த கொள்ளை வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. திருடிய நகைகளை கல்லப்பா தனது காதலியிடம் கொடுத்து விற்பனை செய்து, அதன் மூலம் கிடைத்த பணத்தில் ஆடம்பரமாக வாழ்ந்ததும் உறுதி செய்யப்பட்டது.

கைதான இருவரிடமிருந்து ரூ.7.5 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் 680 கிராம் வெள்ளி பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.