கோவை:
கோவை–அவினாசி சாலையில் கோல்டுவின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை ₹1,790 கோடி செலவில் கட்டப்பட்ட ஜி.டி. நாயுடு மேம்பாலம் தற்போது பொதுப் பயனுக்கு திறக்கப்பட்டுள்ளது. ஆனால், திறந்து சில நாட்களிலேயே அதிவேகத்தில் சென்ற கார் ஒன்று கோல்டுவின்ஸ் பகுதியில் இறங்குதளத்தில் லாரியுடன் மோதியதில் மூவர் பலியானது.
இந்த விபத்தையடுத்து, மேம்பாலத்தில் கண்காணிப்பு கேமரா மற்றும் வேகத்தடுப்புகள் அமைக்க கோரிக்கை எழுந்தது. அதன்படி தற்போது வேகத்தடுப்புகள் மற்றும் வழிகாட்டி பலகைகள் நிறுவப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக, இரவு நேரத்திலும் செயல்படும் ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் கூடிய கண்காணிப்பு கேமரா அமைப்புகள் பொருத்தப்பட உள்ளன.
இதுகுறித்து மாநில நெடுஞ்சாலைத்துறை கோவை கோட்ட பொறியாளர் சமுத்திரக்கனி கூறியதாவது:
“மேம்பாலத்தின் பல்வேறு பகுதிகளில் மொத்தம் 44 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. ஏ.ஐ. வசதியுடன் இருக்கும் இந்த கேமரா, அதிவேகத்தில் செல்லும் வாகனங்களை இரவு நேரத்திலும் தெளிவாகப் பதிவு செய்யும். பதிவு செய்யப்பட்ட புகைப்படங்களுடன், சம்பந்தப்பட்டவர்களின் மொபைல் போன்களுக்கு உடனடி தகவலும் அனுப்பப்படும்.
அத்துடன், போக்குவரத்து விதிமீறல்களின் விவரங்கள் இடம் பெறும் டிஜிட்டல் டி.வி. திரைகள் 17 இடங்களில் அமைக்கப்படும். இந்த முழு திட்டத்திற்கும் ₹3 கோடி செலவாகும். ஒப்பந்த பணிகள் இன்னும் சில நாட்களில் முடிவு செய்யப்பட்டு, பணிகள் விரைவில் தொடங்கும்.
இந்த அமைப்பு செயல்பாட்டுக்கு வந்தவுடன், மேம்பாலத்தில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது தக்க சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்,” என அவர் தெரிவித்தார்.