மதுரை கூடல்புதூர் பகுதியைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவன் தமிழ்ச்செல்வன் மரணத்துக்கு நீதி கேட்டு அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நண்பர்களுடன் விளையாடச் சென்ற மாணவன் வீடு திரும்பாத நிலையில், பின்னர் உடலில் காயங்களுடன் முட்புதர் பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார்.

இந்த வழக்கை தற்போது போலீசார் சந்தேக மரணம் என்ற பிரிவில் விசாரித்து வருகின்றனர். ஆனால் மாணவனின் மரணத்தை கொலை வழக்காக மாற்ற வேண்டும், விசாரணை அதிகாரியை மாற்ற வேண்டும், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என “தமிழ்ச்செல்வன் நீதிக்கான கூட்டியக்கம்” வலியுறுத்தி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற தமிழ்ச்செல்வனின் உறவினர்கள் மற்றும் பொதுமக்களை போலீசார் கைது செய்தனர். அப்போது சில பெண்களை போலீசார் வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்ற காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

தமிழ்ச்செல்வனின் தாயார், தனது மகன் உயிரிழந்து பல நாட்கள் ஆகியும் உண்மையான காரணம் கண்டறியப்படவில்லை என்றும், சம்பந்தப்பட்டவர்களை விரைந்து கண்டுபிடித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கண்ணீருடன் கோரிக்கை வைத்துள்ளார்.