மறுஉருவாக்கப்பட்ட பகுதி
மக்கள் துணையுடன் திராவிட மாடல் 2.0 ஆட்சியை அமைப்போம் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை: திமுக தலைவர் மற்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று காணொலி வழியாக நடைபெற்றது. இதில் அவர் உரையாற்றியபோது, தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையை பாதுகாக்கும் உயரிய நோக்குடன், பசி, உறக்கம், குடும்பம் ஆகியவற்றைத் துறந்து வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணியில் (எஸ்.ஐ.ஆர்.) ஈடுபட்ட அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
2021 சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி பெற்ற வாக்குகள் 2 கோடியே 9 லட்சம் எனக் குறிப்பிட்ட அவர், இந்த முறை அதைவிட அதிக வாக்குகளைப் பெறுவது உறுதி எனத் தெரிவித்தார். “உங்கள் களப்பணியின்மீது உள்ள நம்பிக்கையோடு தெளிவாகச் சொல்கிறேன், நாம்தான் மீண்டும் ஆட்சியமைக்க உள்ளோம்” என்றார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “மக்களின் வாக்குரிமையைப் பாதுகாக்க எஸ்.ஐ.ஆர். பணிகளைப் பார்வையிட்டு மக்களுக்கு உதவிய கழகத்தினரைப் பாராட்டுகிறேன். தமிழ்நாட்டில் ஒவ்வொருவரின் வாக்குரிமை பாதுகாக்கப்படும் வரையிலும் நமது பணி நிறைவடையாது. தொடர்ந்து மக்களைச் சந்தித்து, திராவிட மாடல் அரசின் சாதனைகளை எடுத்துரைத்து, வாக்குச்சாவடியில் வெற்றியை உறுதி செய்வோம். மக்களின் துணையுடன் திராவிட மாடல் 2.0 ஆட்சியை அமைப்போம்” எனக் கூறியுள்ளார்.