மத்திய அரசு அறிவித்துள்ள புதிய டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு விதிகள் 2025, பத்திரிகைத் துறையை ஒரு ‘தரவு செயலாக்கம்’ என வகைப்படுத்தக்கூடும்; அதனால் செய்தி சேகரிப்பிற்கே கூட தனிநபர் ஒப்புதல் தேவைப்படும் சூழல் உருவாகலாம் என்று இந்தியப் பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம் (Editors Guild of India) எச்சரித்துள்ளது.
மத்திய அரசு 2023 ஆகஸ்ட் 11 அன்று டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்புச் சட்டத்தை (Digital Personal Data Protection Act, 2023) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. இந்தியாவில் டிஜிட்டல் தனிநபர் தரவை பாதுகாப்பதற்கான விரிவான சட்டத் திட்டத்தை உருவாக்கும் முக்கிய கட்டமைப்பாக இது அமைகிறது.
இந்தச் சட்டத்திற்கான விதிகளை உருவாக்கும் பணியில், செய்தி நிறுவனங்கள் உட்பட பல்வேறு தரப்பினருடன் மத்திய அரசு ஆலோசனைகள் மேற்கொண்டது. இதற்கிடையில், இந்தச் சட்டம் பத்திரிக்கையாளர்களின் வழக்கமான பணிகளில் தடையாக அமையும் என்ற கவலை எழுந்தது.
இதனையடுத்து, இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப செயலாளர் எஸ். கிருஷ்ணன், “பத்திரிக்கையாளர்களின் இயல்பான பணிகள் இந்தச் சட்டத்தால் பாதிக்கப்பட மாட்டாது” என செய்தி நிறுவனங்களுக்கும் பத்திரிக்கையாளர்களுக்கும் உறுதிமொழி அளித்தார்.

