மெஸ்சி நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடி: நியாயமான விசாரணைக்காக மேற்கு வங்க விளையாட்டு மந்திரி ராஜினாமா

கொல்கத்தாவில் நடைபெற்ற லயோனல் மெஸ்சி நிகழ்ச்சியில் ஏற்பட்ட பெரும் குளறுபடிகள் அரசியல் மற்றும் நிர்வாக ரீதியாக அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டன் லயோனல் மெஸ்சி, மூன்று நாள் சுற்றுப்பயணமாக டிசம்பர் 13‑ஆம் தேதி இந்தியா வந்தார். கொல்கத்தா சென்ற அவர், தனது 70 அடி உயர சிலையை திறந்து வைத்தார். பின்னர் சால்ட் லேக் மைதானத்தில் ரசிகர்களை சந்திக்கும் வகையில் பிரமாண்ட நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆனால், ரசிகர்கள் அதிக அளவில் மைதானத்துக்குள் நுழைய முயன்றதால் அங்கு பெரும் நெரிசல் ஏற்பட்டது. பாதுகாப்பு சிக்கல்கள் அதிகரித்ததால், மெஸ்சி வெறும் 22 நிமிடங்களிலேயே நிகழ்ச்சியிலிருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. நீண்ட தூரத்திலிருந்து வந்ததுடன், அதிக தொகை செலவில் டிக்கெட்டுகள் வாங்கியிருந்த ரசிகர்கள் இதனால் கடும் அதிருப்தியடைந்தனர். கோபம் வெடித்த ரசிகர்கள் இருக்கைகளை உடைத்தும், தடுப்பு வேலிகளை தூக்கி எறிந்தும் வன்முறையில் ஈடுபட்டனர். மைதானத்தில் பல நிமிடங்கள் பரபரப்பு நிலவியது.

இந்த அசம்பாவிதம் தொடர்பாக விசாரணை நடத்த, கொல்கத்தா உயர்நீதிமன்றம் ஓய்வு பெற்ற நீதிபதி ஆஷிம் குமார் ரே தலைமையில் விசாரணைக் குழுவை அமைத்தது. அதேசமயம், நிகழ்ச்சியின் முதன்மை அமைப்பாளர் சதத்ரு தத்தாவை போலீசார் கைது செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகள் குறித்த பல குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், அரசியல் ரீதியாகவும் அழுத்தம் அதிகரித்தது.

இந்த சூழ்நிலையில், மேற்கு வங்க விளையாட்டுத்துறை அமைச்சர் அரூப் பிஸ்வா தனது பதவியை ராஜினாமா செய்தார். முதல் அமைச்சர் மம்தா பானர்ஜிக்கு அவர் தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பியதாகவும், அது ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மெஸ்சி நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிக்கு அரூப் பிஸ்வாவே பொறுப்பெனவும், நிகழ்ச்சிக்கான பாதுகாப்பு மற்றும் ஒழுங்கு ஏற்பாடுகள் போதுமானதாக இல்லை எனவும் பலர் குற்றம் சாட்டியிருந்தனர்.

ராஜினாமா குறித்து அரூப் பிஸ்வா விளக்கமளித்தபோது, “நியாயமான மற்றும் சுதந்திரமான விசாரணை நடைபெற வேண்டும் என்பதற்காகவே நான் பதவியில் இருந்து விலகுகிறேன்” என்று தெரிவித்துள்ளார். விசாரணை எந்தவித அரசியல் அல்லது நிர்வாகத் தலையீடும் இல்லாமல் நடைபெற வேண்டும் என்பதற்காக இந்த முடிவை எடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

மெஸ்சி நிகழ்ச்சியில் ஏற்பட்ட குழப்பம், மேற்கு வங்க அரசின் விளையாட்டு துறையின் செயல்பாடுகள் குறித்து பல கேள்விகளை எழுப்பியுள்ளது. விசாரணைக் குழுவின் அறிக்கை வெளிவரும் வரை இந்த விவகாரம் மாநில அரசியலில் முக்கிய விவாதமாக தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.