ரமேஷ் கண்ணா அதிர்ச்சி வெளிப்பாடு – “ஜானகி என் முறைப்பெண், நான் திருமணம் செய்திருக்க வேண்டியது”

சென்னை: தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குநர், கதாசிரியர், காமெடியன் என பன்முகத்திறமையால் தனித்துவம் பெற்றவர் ரமேஷ் கண்ணா. கே.எஸ். ரவிக்குமாரின் இணை இயக்குநராக பணியாற்றிய காலத்தில் பல படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்தார். பின்னர் நகைச்சுவை நடிகராகவும், இயக்குநராகவும், கதாசிரியராகவும் தன்னை நிலைநிறுத்தினார்.

இந்நிலையில், சமீபத்தில் அவர் ஒரு தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த பேட்டியில் அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டுள்ளார். முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் மனைவி ஜானகி அம்மாள், தனது முறைப்பெண் எனவும், அவரை தான் திருமணம் செய்திருக்க வேண்டியவர் எனவும் தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில்: “ஜானகி என் அப்பாவின் அக்காள் மகள். அதாவது எனக்கு அத்தை மகள், முறைப்பெண். என் தங்கை, ஜானகியின் உறவினரை திருமணம் செய்துள்ளார். அதனால் அவர் எங்கள் குடும்பத்துடன் தொடர்புடையவர். ஜானகியை நான் திருமணம் செய்திருக்க வேண்டியது. ஆனால் எம்ஜிஆர் திருமணம் செய்து கொண்டார். எனக்கும் ஜானகிக்கும் வயது வித்தியாசம் அதிகமாக இருந்தது. அப்போது எங்கள் குடும்பத்திற்கும் அத்தை குடும்பத்திற்கும் பிரச்சினைகள் இருந்தன.

எம்ஜிஆர், ஜானகியை திருமணம் செய்ய வந்தபோது, என் அப்பா அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. அவர் திருமணத்திற்கு எதிராக வழக்கு தொடுத்து, அதில் வெற்றி பெற்று, 14 ஆண்டுகள் அவர்கள் கணவன்–மனைவியாக வாழக் கூடாது என்ற உத்தரவையும் பெற்றார். ஆனால் பின்னர் இருவரும் சேர்ந்து வாழ்ந்தனர். 1962-ம் ஆண்டுக்குப் பிறகுதான் சட்டப்படி அவர்களின் திருமணம் அங்கீகரிக்கப்பட்டது.

ஜானகி 13 வயதில் இருந்தபோது, என் அப்பா அவரை கும்பகோணத்தில் அழைத்து நடனம், நடிப்பு ஆகியவற்றை கற்றுக் கொடுத்து, சினிமாவில் ஸ்டாராக மாற்றினார். எம்ஜிஆர் தனது ‘நான் ஏன் பிறந்தேன்’ என்ற புத்தகத்தில் என் அப்பாவை guardian என குறிப்பிட்டுள்ளார். எம்ஜிஆர், ஜானகியை பெண் கேட்டு வந்தபோது, என் அப்பா கால் மீது கால் போட்டுக் கொண்டு சிகரெட் பிடித்தபடி பேசினார்” என நினைவுகளை பகிர்ந்தார்.

சென்னையைச் சேர்ந்த ரமேஷ் கண்ணாவுக்கு தற்போது 70 வயதாகிறது. நடிகர் ஆர்.எஸ். மனோகரின் நாடகப் பட்டறையில் அவர் நடித்தவர். விக்ரமனின் உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் படத்தின் மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகமானார். பின்னர் உன்னை நினைத்து, பிரெண்ட்ஸ், படையப்பா, வில்லன், வரலாறு, ஆதவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

ரமேஷ் கண்ணாவுக்கு ஜஷ்வந்த் கண்ணன் என்ற மகன் உள்ளார். அவர் விஜய் நடித்த சர்கார் படத்தில் நடித்திருந்தார்.