சென்னை,

சென்னை வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கே.பி.முனுசாமி தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் கரூரில் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு, 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

வரவேற்புரை ஆற்றிய முன்னாள் அமைச்சர் வளர்மதி, “ஜெயலலிதாவுக்கு பின் புதையலாய் எழுந்தவர் எடப்பாடி பழனிசாமி. அம்மாவின் ஆன்மா, எடப்பாடி உருவத்தில் நம்மை பார்த்துக்கொண்டிருக்கிறது. தொண்டர்களின் உறுதியே அதிமுகவின் அஸ்திவாரம். அவர்கள் இருக்கும் வரை எந்த சக்தியும் கட்சியை சாய்க்க முடியாது.

எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு எதிரிகள் இருந்தார்கள்; துரோகிகள் இல்லை. ஆனால் எடப்பாடிக்கு எதிரிகளும், துரோகிகளும் உள்ளனர். வரலாற்றின் குப்பைத்தொட்டிகளில் இடம் பெறும் இவர்கள் எதையும் செய்யட்டும், வரும் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வருவது உறுதி. அதிமுக புலி இப்போதுதான் வேட்டைக்கு கிளம்பியுள்ளது; அது கோட்டைக்கே செல்லும்” எனக் கூறினார்.