தமிழகத்தின் ஏழு மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான “ஆரஞ்சு அலர்ட்” அறிவிப்பு

வங்கக்கடலில் உருவான ‘டிட்வா’ புயல் கடலோரப் பகுதிகளை ஒட்டி நகர்ந்து, பல இடங்களில் கனமழை பெய்யச் செய்து வருகிறது. இந்த புயல் உருவாவதற்கு முன்பே, இது காற்று சேதத்தை ஏற்படுத்தாமல், பரவலாக நல்ல மழையை வழங்கும் என்று தனியார் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்திருந்தனர்.

ஆனால், கடந்த 30 ஆம் தேதி வட தமிழகத்தில் பெரும் மழை பெய்யும் என கணிக்கப்பட்டிருந்த போதிலும், வறண்ட காற்று ஊடுருவியதால் அன்றைய தினம் மழை பொய்த்தது. இதனால் புயல் வலுவிழந்து சென்னைக்கு அருகே தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இதன்பின் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் கொட்டிய மழை வட மாவட்டங்களில், குறிப்பாக சென்னையில் போதிய அளவில் பெய்யாததால் பலர் ஏமாற்றமடைந்தனர்.

சென்னை கடலோரப் பகுதிகளில் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக சிக்கியிருந்த டிட்வா, மேற்கத்திய தாழ்வுநிலை மற்றும் இமயமலையிலிருந்து வரும் ஈரப்பத காற்றை இழுத்ததால், மீண்டும் வலுவான மேகக் கூட்டங்களை உருவாக்கத் தொடங்கியது. இரண்டு நாட்களுக்கு முன்பிருந்தே அதன் மழை ஆட்டம் அதிகரித்து, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடைவிடாது கனமழை பெய்தது. திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் சில இடங்களில் மிக கனமழை பதிவாகியது.

வட மாவட்டங்களில் 18 மணி நேரத்திற்கு மேல் தொடர்ச்சியாக மழையை வழங்கிய இந்த தாழ்வு மண்டலம் காரணமாக, சென்னை மற்றும் அதன் அருகிலுள்ள பல பகுதிகளில் தண்ணீர் தேங்கி வெள்ளக்காடாக மாறியுள்ளன.

நேற்று காலை மேலும் வலுவிழந்த நிலையில் இருந்தாலும், வட மாவட்டங்களில் மழையை தொடர்ந்து வழங்கியது. பின்னர் கடலோரப் பகுதி அருகே காற்றழுத்த தாழ்வு பகுதியில் நிலைத்து, தற்போதும் வட தமிழகத்தில் தாழ்வு நிலையாக இருக்கிறது.

இந்நிலையில், தமிழகத்தின் 7 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்:

  • சென்னை

  • காஞ்சிபுரம்

  • செங்கல்பட்டு

  • ராணிப்பேட்டை

  • திருவள்ளூர்

  • நீலகிரி

  • கோவை மாவட்ட மலைப்பகுதிகள்

மேலும், திருவண்ணாமலை உள்பட 18 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


நாளை (04-12-2025) கனமழை எச்சரிக்கை


மகா தீப நேரத்தில் திருவண்ணாமலையில் மழை பெய்யுமா?

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலின் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வான மகா தீபம் இன்று மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரம் கொண்ட அண்ணாமலையார் மலை உச்சியில் ஏற்றப்படுகிறது. அந்த நேரத்தில் ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என்று கோஷம் எழுப்பி லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வார்கள்.

நேற்று முதல் திருவண்ணாமலையில் பக்தர்கள் அதிக அளவில் திரண்டதால் நகரம் முழுவதும் பக்தர்களின் கூட்டம் நிறைந்துள்ளது. தீபத்திருவிழாவை முன்னிட்டு நகரம் முழுவதும் திருவிழா சூழ்நிலை காணப்படுகிறது.

இந்த நிலையில், திருவண்ணாமலை உள்பட 18 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும் நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் வழங்கியுள்ளது.