Home » மின் இணைப்பு வழங்க ரூ.20 ஆயிரம் லஞ்சம் பெற்ற பொறியாளர் கைது

மின் இணைப்பு வழங்க ரூ.20 ஆயிரம் லஞ்சம் பெற்ற பொறியாளர் கைது

போடி: தேனி மாவட்டம் தேவாரத்தில், விவசாய இலவச மின்இணைப்பு வழங்குவதற்காக முன்னாள் ராணுவ வீரர் ராமச்சந்திரனிடமிருந்து ரூ.20 ஆயிரம் லஞ்சம் பெற்ற இளநிலை மின் பொறியாளர் லட்சுமணன் (38) என்பவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்துள்ளனர்.

தேவாரம் வடக்கு தெருவைச் சேர்ந்த மணி, 2022ஆம் ஆண்டு விவசாய இலவச மின்இணைப்பு பெற தேவாரம் உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்தார். அவருக்கு இணைப்பு வழங்க அனுமதி கிடைத்திருந்தாலும், சில நாட்களுக்கு முன்பு மின்இணைப்பு வழங்கும் பணி நிறுத்தப்பட்டிருந்தது. அதற்கிடையில் மணி இறந்தார்.

அவரது மகனான முன்னாள் ராணுவ வீரர் ராமச்சந்திரன் (40) அதே தோட்டத்திற்கான இலவச மின்இணைப்பை பெற விண்ணப்பித்தார். நான்கு நாட்களுக்கு முன்பு அவருக்கும் இணைப்பு வழங்க அனுமதி கிடைத்தது. இதற்கான டெபாசிட் ரூ.9,520-ஐ அவர் செலுத்தினார்.

இந்த நிலையில், பெரியகுளம் வைத்தியநாதபுரத்தைச் சேர்ந்த லட்சுமணன் (38), தேவாரம் உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் இளநிலை மின் பொறியாளராக பணியாற்றி வருகிறார். மின்இணைப்பு வழங்க ராமச்சந்திரனிடம் அவர் மூன்று நாட்களுக்கு முன் ரூ.20 ஆயிரம் லஞ்சம் கேட்டார்.

இதனால், ராமச்சந்திரன் தேனி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. நாகராஜன் தலைமையில், தேனி இன்ஸ்பெக்டர்கள் ராமேஸ்வரி, ஜெயப்பிரியா ஆகியோர் நேற்று காலை 10 மணியளவில் நடவடிக்கை எடுத்தனர். ரசாயனம் தடவிய ரூ.500 நோட்டுகளை ராமச்சந்திரனிடம் வழங்கி, தேவாரம் உதவி மின் பொறியாளர் அலுவலகத்தை கண்காணித்தனர்.

ராமச்சந்திரனிடமிருந்து ரூ.20 ஆயிரம் லஞ்சம் பெற்றபோது, மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் லட்சுமணனை கைது செய்து, பணத்தை பறிமுதல் செய்தனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *