பெங்களூரு:
சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி கடந்த ஆண்டு (2024) ஜூன் மாதத்தில் பெங்களூருவுக்கு காரில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தையடுத்து காமாட்சி பாளையா போலீசார் வழக்குப்பதிவு செய்து, நடிகர் தர்ஷன், அவரது தோழி நடிகை பவித்ரா கவுடா உட்பட 17 பேரை கைது செய்தனர். இதில் தர்ஷன் உள்ளிட்ட ஏழுபேர் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கின்றனர்; மீதமுள்ள பத்துபேர் ஜாமீனில் வெளியே உள்ளனர்.
இந்த வழக்குக்கு தொடர்பான விசாரணை பெங்களூரு நகர சிவில் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் நடத்தப்பட்டது. அப்போது சாட்சிகள் விசாரணை தொடங்குவது மற்றும் யாருக்கு சம்மன் அனுப்புவது குறித்து நேற்று அறிவிப்பதாக நீதிபதி வீரப்பா தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் நேற்று வழக்கின் விசாரணை மீண்டும் நடந்தது.
விசாரணையின் போது, வரும் 17ஆம் தேதி முதல் சாட்சிகளிடம் விசாரணை தொடங்கும் என்று நீதிபதி உத்தரவிட்டார். அன்றைய தினம் 7 மற்றும் 8ஆவது சாட்சிகளாக இணைக்கப்பட்டுள்ள ரேணுகாசாமியின் தந்தை காசிநாத் சிவனகவுடர் மற்றும் அவரது தாய்க்கு சம்மன் அனுப்ப உத்தரவிடப்பட்டது.
அதே சமயம், வழக்கில் 14ஆவது குற்றவாளியாக உள்ள நடிகர் தர்ஷனின் நண்பர் பிரதோஷின் தந்தை மறைவிற்கு ஏற்ப நடக்கும் சடங்கில் பங்கேற்க நான்கு நாள் இடைக்கால ஜாமீன் வழங்கியும் நீதிபதி உத்தரவிட்டார்.
ரேணுகாசாமி கொலை வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரும் 17ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அந்த நாளிலிருந்து வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள சாட்சிகளிடம் அதிகாரப்பூர்வமாக விசாரணை தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.