தமிழகத்தில் ஆவின் பால் விநியோகம், தள்ளுபடி சலுகைகள் மற்றும் பால் கொள்முதல் தொடர்பாக தொடர்ந்து வெளியாகும் தகவல்கள் கவலை அளிப்பதாகக் கூறியுள்ள தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், ஆவின் நிறுவனத்தின் தற்போதைய நிலை குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த சில நாட்களாக ஆவின் நிறுவனம் தொடர்பாக வெளியாகும் செய்திகள் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
தள்ளுபடி ரத்து, விநியோகம் குறைவு
கோவையில் மாதாந்திர ஆவின் பால் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்பட்டிருப்பது, சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் ஆவின் பால் விநியோகம் சுமார் 30 சதவீதம் வரை குறைந்திருப்பது, சில விற்பனை நிலையங்களில் ஒருவருக்கு ஒரு லிட்டர் பால் மட்டுமே வழங்கப்படும் என்ற கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டிருப்பது போன்ற தகவல்கள் வெளியாகியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
மேலும், மே மாதத்தில் மட்டும் 10 மாவட்டங்களில் ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்த பாலில் சுமார் 60 சதவீதம் தரச் சோதனையில் முழுமையாக தகுதி பெறவில்லை என்ற தகவல்களும் வெளிவந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள்
ஆவின் நிறுவனம் மீது ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்கள் அதிக நம்பிக்கை வைத்திருப்பதாக கூறிய நயினார் நாகேந்திரன், இதுபோன்ற சிக்கல்கள் தொடர்ந்தால் மக்கள் அதிக விலைக்கு தனியார் நிறுவனங்களின் பாலை வாங்க வேண்டிய நிலை உருவாகும் என்றார்.
இது குடும்பங்களின் மாதாந்திர செலவை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், ஊட்டச்சத்து பாதுகாப்பிலும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.
பால் கொள்முதல் வீழ்ச்சி
முந்தைய ஆட்சிக்காலத்தில் பால் உற்பத்தியாளர்களுக்கு போதிய ஊக்கத் தொகை வழங்கப்படாததால் ஆவினுக்கு கிடைக்கும் பால் கொள்முதல் அளவு குறைந்ததாகவும், இதன் காரணமாக உற்பத்திச் செலவுகள் அதிகரித்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
தற்போதைய அரசு இந்த சவால்களை சமாளிப்பதற்குப் பதிலாக, பால் தரம், விநியோகம் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சலுகைகளில் சமரசம் செய்து நஷ்டத்தை ஈடுகட்ட முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வெள்ளை அறிக்கை வெளியிட கோரிக்கை
ஆவின் நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள சவால்கள், நிதிநிலை, பால் கொள்முதல் நிலவரம், விநியோக சிக்கல்கள் மற்றும் முறைகேடுகள் குறித்து தமிழக அரசு விரிவான வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், Amul போன்ற பிற மாநில கூட்டுறவு பால் நிறுவனங்கள் வெற்றிகரமாக செயல்படுவதுபோல், ஆவினையும் வலுப்படுத்த அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.