துபாய்: பாகிஸ்தான் – இலங்கை அணிகளுக்கிடையிலான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை ராவல்பிண்டியில் நடைபெற்றது.
இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று, ஒருநாள் தொடரை 3–0 என முழுமையாக கைப்பற்றியது. கடைசி போட்டியின் 21வது ஓவரில் பாகிஸ்தான் அணியின் மூத்த வீரர் பாபர் அசாம் ஆட்டமிழந்தார். அப்போது ஏற்பட்ட விரக்தியில் அவர் மட்டையால் ஸ்டம்ப்களை அடித்துவிட்டு சென்றார்.
ஐசிசி விதிமுறைகளின் படி, இது ஒழுங்கீனமாகக் கருதப்படும் குற்றமாகும். இதுகுறித்து களநடுவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், பாபர் அசாமுக்கு போட்டி ஊதியத்தின் 10 சதவீதத்தை அபராதமாக விதிக்க ஐசிசி உத்தரவிட்டுள்ளது. கூடுதலாக, அவருக்கு ஒரு தகுதியிழப்பு புள்ளியும் வழங்கப்பட்டுள்ளது.

