சென்னை:

சென்னை பெருங்குடி குப்பைக் கிடங்கில் குவிந்துள்ள மரபுக்கழிவுகளை அகற்றும் முக்கிய திட்டத்தை தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று தொடங்கி வைத்தார். ரூ.53.60 கோடி மதிப்பீட்டில் 5.50 லட்சம் மெட்ரிக் டன் அளவிலான மரபுக்கழிவுகளை பயோ மைனிங் (Bio-Mining) முறையில் அகற்றும் பணியை அவர் கொடியசைத்து தொடங்கினார்.

பணிகள் தொடங்குவதற்கு முன்பு, பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த திட்ட வரைபடங்களை அமைச்சர் நேரு பார்வையிட்டார். பின்னர், பணிகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி தேவையான வழிகாட்டுதல்களை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என்.நேரு கூறியதாவது: பெருங்குடி குப்பைக் கிடங்கில் கடந்த 40 ஆண்டுகளாக பல்வேறு பகுதிகளில் இருந்து உருவாகும் திடக்கழிவுகள் கொட்டப்பட்டு வந்தன. குறிப்பாக 2011-ம் ஆண்டுக்கு முன்பு வரை பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள நகராட்சிகளில் இருந்து உருவான கழிவுகள் இங்கு கொட்டப்பட்டன. பின்னர் ஆலந்தூர், வளசரவாக்கம், பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் பகுதிகள் சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது மாநகராட்சியின் 9 முதல் 15 வரை உள்ள மண்டலங்களில் உருவாகும் திடக்கழிவுகள் மட்டுமே இங்கு கொட்டப்பட்டு வருகின்றன.

பெருங்குடி குப்பைக் கிடங்கு சுமார் 225 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த பகுதி 6 சிப்பங்களாக (Packages) பிரிக்கப்பட்டு, தூய்மை இந்தியா 1.0 திட்டத்தின் கீழ் ரூ.350.065 கோடி மதிப்பில் தரைமட்டத்திற்கு மேலாக குவிந்திருந்த சுமார் 29.28 லட்சம் கனமீட்டர் மரபுவழி கழிவுகளை சுற்றுச்சூழலுக்கு உகந்த பயோ மைனிங் முறையில் அகற்றி நிலத்தை மீட்டெடுக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

28.02.2026 நிலவரப்படி, மொத்தமாக இருந்த 29.28 லட்சம் கனமீட்டர் மரபுக்கழிவுகளில் 29.20 லட்சம் கனமீட்டர் கழிவுகள் ஏற்கனவே அகற்றப்பட்டுள்ளன. மொத்தம் 6 சிப்பங்களில் 3, 4 மற்றும் 5 ஆகிய சிப்பங்களில் பணிகள் முழுமையாக நிறைவு பெற்றுள்ளன. இதன் மூலம் சுமார் 94 ஏக்கர் நிலப்பரப்பு மீட்டெடுக்கப்பட்டுள்ளது. சிப்பம் 6-ல் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தில் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் மார்ச் 2026 இறுதிக்குள் நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், சிப்பம் 1 மற்றும் 2 பகுதிகளில் தூய்மை இந்தியா 1.0 திட்டத்தின் கீழ் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், 2025 ஜூன் மாதத்தில் ட்ரோன் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இன்னும் 5.50 லட்சம் மெட்ரிக் டன் மரபுக்கழிவுகள் இருப்பது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து தூய்மை இந்தியா 2.0 திட்டத்தின் கீழ் மீதமுள்ள கழிவுகளை அகற்ற ரூ.53.60 கோடி மதிப்பில் திட்டம் அறிவிக்கப்பட்டது.

இதற்கான ஒப்பந்தம் குறைந்த விலைப்புள்ளி கோரிய நிறுவனத்திற்கு ரூ.51.26 கோடி மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது. 25.02.2026 அன்று பணியாணை வழங்கப்பட்டுள்ள இந்த திட்டத்தின் காலவரையறை ஒப்பந்தம் செய்யப்பட்ட நாளிலிருந்து 9 மாதங்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த 5.50 லட்சம் மெட்ரிக் டன் மரபுக்கழிவுகள் முழுமையாக அகற்றப்பட்ட பிறகு சிப்பம் 1 மற்றும் 2 பகுதிகளில் கூடுதலாக சுமார் 78 ஏக்கர் நிலப்பரப்பு மீட்டெடுக்கப்படும். தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின்படி மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை பெருங்குடி குப்பைக் கிடங்கின் முழுமையான மறுசீரமைப்பில் முக்கியமான கட்டமாக அமையும். இது சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நிலவள மீட்பு மற்றும் நகர வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பாக இருக்கும் என அமைச்சர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மு.மகேஷ்குமார், மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன், இணை ஆணையர் (சுகாதாரம்) வீ.ப.ஜெயசீலன், தெற்கு வட்டார துணை ஆணையர் அஃதாப் ரசூல், மண்டலக் குழுத் தலைவர் எஸ்.வி.ரவிச்சந்திரன், நிலைக்குழுத் தலைவர்கள் கோ.சாந்தகுமாரி (சுகாதாரம்), பாலவாக்கம் த.விஸ்வநாதன் (கல்வி) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.