‘கலைக்கு எதிரான திட்டமிட்ட வன்முறை’ – ‘ஜனநாயகன்’ கசிந்ததற்கு நடிகர் சங்கம் கண்டனம்

சென்னை: விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையத்தில் சட்டவிரோதமாகக் கசிந்ததற்கு தென்னிந்திய நடிகர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

திரையரங்கின் இருள் அகறும் முன்பே ‘ஜனநாயகன்’ படைப்பின் உயிரைப் பறித்து, களத்தனமாக சமூக வலைத்தளங்களில் அறுத்தெறிந்து, அதன் வருங்காலத்தை காரிருளில் மூழ்கடித்த இந்த ஈனச் செயல், சாதாரண சட்ட விதி மீறல் அல்ல; காலங்காலமாக மக்களை மகிழ்விக்கும் கலக்கு எதிரான திட்டமிட்ட வன்முறை என்று சங்கம் அறிக்கையில் கூறியுள்ளது.

அந்த வன்முறைதான் ‘ஜனநாயகம்’ என்றும் இரையை விழுங்கியது என சாடினார். கலை மட்டுமே நம்பி வாழும் தொழிலாளர்களின் உழைப்புக்கு எதிரான கொடூர யுத்தம்; மனித மனசாட்சிக்கு எதிரான நம்பிக்கை துரோகம் என விமர்சித்துள்ளது. ஒரு திரைப்படம் சில மணித்துளிகள் கண்முன் ஓடும் கற்பனை கதையல்ல; ஆயிரம் கனவுகளின் கூட்டுத்தொகை என்று சித்தரித்துள்ளது.

ஒவ்வொரு காட்சியின் பின்னணியிலும் வியர்வை, உழைப்பு, பல குடும்பங்களின் வாழ்வாதாரம், ஒரு சமூகத்தின் உணர்வு அனைத்தும் பின்னிப் பிணைந்திருக்கின்றன. திரைத்துறை வெறும் பொழுதுபோக்கு தொழில் அல்ல; அதை நம்பி வாழும் பலாயிரக்கணக்கானோரின் வாழ்க்கை வழியும், சிந்தனைகளை விதைத்து சமூக மாற்றங்களை உருவாக்கும் வலிமைமிக்க தளமும் ஆகும்.

இத்தகைய துறையை சுயலாபம், காழ்ப்புணர்ச்சி அல்லது பழிவாங்கும் மனநிலையால் களங்கப்படுத்த முயல்பவர்கள் சட்டத்தையும், சமூக நெறிகளையும் மீறுபவர்கள். இச்செயலை ஆற்றியவர்கள் எவராக இருந்தாலும், அவர்களது அடையாளம் வெளிச்சத்திற்குக் கொண்டுவரப்பட வேண்டும்; நீதித்துறையின் தண்டனை அவர்களைத் தாக்க வேண்டும்; அது ஒரு எடுத்துக்காட்டாக நிலைத்திருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

இது ஒரே ஒரு திரைப்பட சார்ந்த குறைகூறல் அல்ல; ஒட்டுமொத்த துறையின் மாண்புக்கு விடப்படும் அறைகூவல். திரைத்துறையைச் சேர்ந்த அனைத்து அமைப்புகளும், கலைஞர்களும், தொழிலாளர்களும் இணைந்து இத்தகைய செயல்களுக்கு எதிராக உறுதியான நிலைப்பாட்டை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளது. இந்த முயற்சியில் தென்னிந்திய நடிகர் சங்கம் முழுமையான ஒத்துழைப்புடன் இணைந்து செயல்படும் என உறுதியளித்துள்ளது.