ஶ்ரீரங்கம்:

தமிழக முன்னாள் பாஜக தலைவர் கே. அண்ணாமலை, தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் எனவும், தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். ஶ்ரீரங்கம் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் ஆர். மனோகரனை ஆதரித்து நடந்த பிரசார கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய அவர், தி.மு.க. ஆட்சியின் குறைகளை கடுமையாக விமர்சித்தார்.

அண்ணாமலை பதிவில் கூறியதாவது: “கடந்த ஐந்து ஆண்டுகளாக தமிழக மக்கள் தீயசக்தி தி.மு.க. காட்டாட்சியில் அனுபவிக்கின்றனர். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, மக்களுக்கு நிம்மதி இல்லை, வளர்ச்சி இல்லை. இந்நிலையை மாற்றி அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தி, மக்களுக்கான நல்லாட்சி அளிக்க வேண்டும். இதற்காக தேசிய ஜனநாயகக் கூட்டணி தேர்தல் களத்தில் வெற்றி நடைபோட்டு வருகிறது.”

ஶ்ரீரங்கம் தொகுதி தி.மு.க. எம்எல்ஏ பழனியாண்டியை கடுமையாக சாடிய அவர், “இவர் கனிம வளங்களை கொள்ளையடித்ததாக செய்தி சேகரித்த தனியார் தொலைக்காட்சி நிருபரை கொலைவெறியுடன் தாக்கினார். திண்டுக்கலில் காணாமல் போன கருப்பசாமியின் சடலம் இவரது குவாரியில் இருந்து மீட்கப்பட்டது. திருச்சி சிவாவின் வீட்டில் தாக்குதல் நடத்தியதும் இவர்தான். இவருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுத்தால் தி.மு.க. டெபாசிட் கூட வாங்க முடியாது. ஆனால் ஶ்ரீரங்கம் மக்கள் யாரை வைத்தாலும் படுதோல்வியளிக்க தயாராக உள்ளனர்” என சாடினார்.

தொடர்ந்து, “பெண்களுக்கு பாராளுமன்றம், சட்டமன்றங்களில் 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்க மத்திய பாஜக அரசு கொண்டுவந்த சட்டத் திருத்தத்தை தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கூட்டுச்சதி செய்து தோற்கடித்தன. பெண்கள் முன்னேற்றத்திற்கு எதிரான இக்கட்சிகளை தமிழக சகோதரிகள், தாய்மார்கள் விரட்ட வேண்டும்” என வலியுறுத்தினார்.

இறுதியாக, “தமிழக மக்கள் விரும்பும் நல்லாட்சி அமைந்து, தமிழகம் வளர, தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் ஶ்ரீரங்கம் வேட்பாளர் ஆர். மனோகரனை பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுங்கள். தேசிய ஜனநாயகக் கூட்டணி வெல்லட்டும்! ஶ்ரீரங்கம் செழிக்கட்டும்” என முடிவுறைத்தார்.

ஶ்ரீரங்கம் தொகுதியில் தி.மு.க. எம்எல்ஏ பழனியாண்டிக்கு எதிராக அ.தி.மு.க. வேட்பாளராக முன்னாள் அரசு தலைமை கொறட்டா ஆர். மனோகரன் போட்டியிடுகிறார். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆதரவுடன் தீவிர பிரசாரம் நடத்தி வருகிறார். அண்ணாமலை 7 தொகுதிகளில் பிரசாரம் செய்து வருவதாகவும் தெரிகிறது. தேர்தல் ஆர்வம் அதிகரித்துள்ளது