மும்பை,
17 வயது சிறுவனுடன் வீட்டை விட்டு வெளியேறி ஓடிய 21 வயது இளம்பெண் தொடர்பான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தகவலின்படி, 21 வயதுடைய இளம்பெண் ஒருவர் தனது வீட்டில் இருந்தவர்களுக்கு தெரியாமல் வெளியேறி மும்பைக்கு சென்றதாக கூறப்படுகிறது. அங்கு சென்ற பிறகு தனது காதலனாக கூறப்படும் 17 வயது சிறுவனை தொடர்பு கொண்டு மும்பைக்கு வருமாறு அழைத்துள்ளார். அதன் பின்னர் இருவரும் ஒன்றாக சேர்ந்து அங்கிருந்து குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் ரெயில் நிலையத்திற்கு சென்றுள்ளனர்.
இதற்கிடையில் சிறுவன் வீட்டிற்கு திரும்பாததால் அவரது பெற்றோர் பதற்றமடைந்தனர். நீண்ட நேரமாக மகன் காணாமல் போனதால் அவர்கள் ராஜ்கோர்ட் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை தொடங்கினர். சிறுவனை கண்டுபிடிக்க பல்வேறு இடங்களில் தேடுதல் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.
இந்த நிலையில் சூரத் ரெயில் நிலையத்தில் உள்ள பொது காத்திருப்பு அறையில் ஒரு இளம்பெண்ணும், சிறுவனும் பதற்றமாக அமர்ந்திருந்ததை ரெயில்வே போலீசார் கவனித்தனர். அவர்களின் நடத்தை சந்தேகமாக இருந்ததால் உடனடியாக அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையின் போது அந்த சிறுவன் காணாமல் போனதாக ராஜ்கோர்ட் பகுதியில் புகார் பதிவு செய்யப்பட்டிருப்பது குறித்து ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் உடனடியாக ராஜ்கோர்ட் போலீசாரை தொடர்புகொண்டு சம்பவம் குறித்து தகவல் தெரிவித்தனர்.
அதன்பின் ராஜ்கோர்ட் போலீசார் சூரத் ரெயில் நிலையத்திற்கு வந்து இருவரையும் காவலில் எடுத்தனர். பின்னர் சிறுவனை அவரது பெற்றோரிடம் பாதுகாப்பாக ஒப்படைத்தனர். இளம்பெண்ணை போலீசார் காவலில் வைத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக அவர்கள் எவ்வாறு அறிமுகமானார்கள், எதற்காக வீட்டை விட்டு வெளியேறினர், மேலும் யாராவது இதற்கு பின்னணி ஆதரவாக இருந்தார்களா என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
17 வயது சிறுவனுடன் இளம்பெண் வீட்டை விட்டு வெளியேறி பல நகரங்களுக்கு சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.