வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்மொழிந்த அமைதி திட்டம், ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளின் கருத்துக்களைப் பார்க்கப் பார்க்க தினமும் திருத்தப்பட்டு வருகிறது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
ரஷ்யா–உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில், டிரம்ப் 28 அம்சங்களைக் கொண்ட அமைதி திட்டம் ஒன்றை பரிந்துரைத்திருந்தார்.
அதில்,
உக்ரைனுக்கு நேட்டோவில் உறுப்பினர் இடமில்லை,
டான்பாஸ் பகுதியை ரஷ்யாவுக்கு ஒப்படைக்க வேண்டும்,
உக்ரைன் ராணுவ பலத்தை குறைக்க வேண்டும்
ஆகிய அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.
இந்த பரிந்துரைகள் ரஷ்யாவுக்கு சாதகமானவை, உக்ரைனுக்கு பாதகமானவை என்று அதிபர் ஜெலன்ஸ்கி விமர்சித்தார். இதனைத் தொடர்ந்து, உக்ரைன் அமெரிக்காவின் உதவியை மறந்துவிட்டதாக அதிபர் டிரம்ப் கடுமையாக கண்டித்திருந்தார்.
ஜெனீவாவில் பேச்சுவார்த்தை
அமெரிக்க அதிகாரிகள் மற்றும் உக்ரைன் பிரதிநிதிகள் ஜெனீவாவில் உயர்நிலை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
இதுகுறித்து அமைச்சர் மார்கோ ரூபியோ கூறியதாவது:
“இருநாடுகளிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை பயனுள்ளதாக அமைந்துள்ளது. அதிபர் டிரம்ப் முன்வைத்துள்ள 28 அம்ச அமைதி திட்டம், ரஷ்யா மற்றும் உக்ரைன் இரு தரப்பும் ஏற்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் தினமும் மாற்றங்கள் செய்யப்படுகின்றன.
இன்னும் சில கருத்து வேறுபாடுகள் உள்ளன; அவை தீர்க்க முடியாதவை அல்ல — ஆனால் கூடுதல் நேரம் தேவை. இந்த அமைதி திட்டம் அமெரிக்கா தயாரித்தாலும், ரஷ்யா மற்றும் உக்ரைனின் ஒப்புதலின்றி எந்த அம்சமும் உருவாக்கப்படவில்லை.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

