என் பெயர் யோகேஸ்வரி. நான் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள படந்தால் ஊரைச் சேர்ந்த ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த பெண். அப்பா ஒரு தேநீர் கடையில் வேலை செய்கிறார்; அம்மா பட்டாசு தொழிலில் வேலை பார்க்கிறார். நான் வளர்ச்சி குறைபாடுடன் பிறந்திருந்தாலும், என் கனவுகளுக்குப் முன் எந்தத் தடையும் நிற்கக்கூடாது என்ற நம்பிக்கை எனக்குள் எப்போதும் இருந்தது.

அரசு மேல்நிலைப் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு முடிந்ததும், “இனி நான் என்ன படிப்பேன்? எங்கு சேர்வேன்? எப்படி போக முடியும்?” என்ற கேள்விகள் தினமும் மனதைத் துளைத்தன.

அந்த நேரத்தில் தான் ‘நான் முதல்வன்’ திட்டத்தில் உள்ள ‘கல்லூரி கனவு’ நிகழ்ச்சியைப் பற்றி அறிந்தேன். எங்கள் மாவட்ட ஆட்சியராக இருந்த திரு. ஜெயசீலன், இ.ஆ.ப. அவர்களால் அந்த நிகழ்ச்சி மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நான் கலந்து கொண்ட அந்த ஒரு நிகழ்ச்சி, என் வாழ்க்கையை முழுமையாக மாற்றிய ஒரு மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

அங்கே உயர்கல்வி குறித்து—எத்தனை வாய்ப்புகள் உள்ளன, எந்த நுழைவுத் தேர்வுகளை எழுதலாம், என்னென்ன படிப்புகளைத் தேர்வு செய்யலாம்—என்றெல்லாம் மிகவும் தெளிவாக விளக்கிக் கூறினார்கள். வழிகாட்டுதலோடு மட்டுமில்லாமல், நேரடியாக எனக்காகவே JEE Main தேர்விற்கான பதிவையும் செய்து வைத்தார்கள்.

பதிவு செய்த பிறகும், “எப்படி படிக்க வேண்டும், எப்படி தயாராக வேண்டும்” என்று சிறப்பு பயிற்சி அளித்தார்கள். அந்த பயிற்சியும், அவற்றின் வழிகாட்டுதலும் தான் இன்று என்னை IIT Bombay – Aerospace Engineering என்ற நான் கனவில் கூட நினைக்காத உயரத்திற்கு கொண்டு சென்றிருக்கிறது.

இது என் தனிப்பட்ட சாதனை மட்டுமல்ல… என்னைப் போன்ற சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் வாழ்க்கையையும் மாற்ற முடியும் என்பதை உணர்த்திய ‘நான் முதல்வன்’ திட்டத்தின் வெற்றி. இந்த திட்டத்தை உருவாக்கி, எங்களைப் போன்ற ஆயிரக்கணக்கான மாணவர்களின் வாழ்க்கையில் ஒரு புதிய வெளிச்சம் ஏற்றிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு என் இதயபூர்வமான நன்றிகள்.

இன்றைக்கு நான் IIT Bombay-யில் Aerospace Engineering படித்து வருகிறேன் என்பதை நினைத்தாலே கண்களில் கண்ணீர் வருகிறது. இது என் சாதனை மட்டும் அல்ல… என் அப்பா, அம்மா மற்றும் எங்கள் முழு குடும்பத்திற்கும் பெருமையான தருணம். ‘நான் முதல்வன்’ திட்டம் எனக்கு கல்வி வசதி மட்டுமின்றி, தைரியம், நம்பிக்கை, எதிர்காலம் — இந்த மூன்றையும் கொடுத்தது.


வெற்றி நிச்சயம் திட்டம்:

என் பெயர் நந்தினி. நான் பட்டப்படிப்பு முடித்துள்ளேன். என் தந்தை கூலித் தொழிலாளி. என் கணவர் கார்த்திக் — அவர் மாற்றுத் திறனாளி. நானும் பேச்சு மற்றும் செவித்திறன் குறைபாடுடன் வாழ்கிறேன்.

நாங்கள் திருவள்ளூர் மாவட்டம் ஏர்ணாவாக்கம் ஊரில் வசித்து வருகிறோம். என் உடல்நிலை காரணமாக, படிப்பை முடித்த பிறகு நீண்ட காலம் வேலை கிடைக்காமல் சிரமப்பட்டேன். குடும்பத்திற்கும் பொருளாதார ரீதியில் பல சவால்கள் இருந்தன.

அந்த நேரத்தில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் செயல்படுத்தும் “வெற்றி நிச்சயம் திட்டம்” எனக்கு ஒரு புதிய திசையை காட்டியது. இந்த திட்டத்தின் மூலம், ZF Commercial Vehicle Control Systems நிறுவனத்தில் தொழில்துறை திறன் பயிற்சி (Industrial Skill Training) பெறும் வாய்ப்பு கிடைத்தது. அங்கு Production Operator பணிக்குத் தேவையான திறன்களை நான் கற்றுக்கொண்டேன்.

பயிற்சியை வெற்றிகரமாக முடித்த பிறகு, அதே நிறுவனத்தில் மாதம் ரூ.18,000 சம்பளத்துடன், உணவு வசதியுடனான வேலை கிடைத்தது.

இந்த வேலை வாய்ப்பு எனக்கு மட்டுமின்றி, என் குடும்பத்திற்கும் ஒரு நிலைத்தன்மையையும் நம்பிக்கையையும் வழங்கியுள்ளது. ஒரு மாற்றுத் திறனாளியாக, நான் இந்த சமூகத்தில் எனக்கான இடத்தை உருவாக்கிக் கொண்டேன். இந்த மகிழ்ச்சியான தருணத்தை உருவாக்கித் தந்த தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் “வெற்றி நிச்சயம் திட்ட”த்திற்கு என் இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.