சபரிமலையில் மண்டல பூஜை நிறைவு – மகரவிளக்கு பூஜைக்காக 30ம் தேதி நடை திறப்பு

சபரிமலை: இந்தாண்டுக்கான மண்டல பூஜைகளை முன்னிட்டு சபரிமலை கோவில் நடை நவம்பர் 16-ஆம் தேதி திறக்கப்பட்டது. அடுத்த நாள், நவம்பர் 17-ஆம் தேதி அதிகாலை முதல் மண்டல பூஜைகள் தொடங்கின. அதன் பின்னர் தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இந்த சீசனில் வித்தியாசமாக சனி, ஞாயிறு தினங்களில் பக்தர்கள் கூட்டம் குறைவாக இருந்தாலும், மற்ற நாட்களில் அதிகமான கூட்டம் காணப்பட்டது. அரவணை விற்பனையிலும் பல மடங்கு உயர்வு ஏற்பட்டது.

இதுவரை சபரிமலைக்கு வந்துள்ள பக்தர்களின் எண்ணிக்கை 30 லட்சத்தை தாண்டியுள்ளது. டிசம்பர் 25-ஆம் தேதி வரை கிடைத்த தகவலின்படி, மொத்தம் 30,01,532 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். கடந்த ஆண்டு டிசம்பர் 23-ஆம் தேதிக்குள் 30,78,044 பக்தர்கள் தரிசனம் செய்திருந்தனர். மேலும், கடந்த ஆண்டு டிசம்பர் 25-ஆம் தேதிக்குள் மொத்தம் 32,49,756 பக்தர்கள் வந்திருந்தனர். இதனால், இந்தாண்டு வருகை தந்த பக்தர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட சுமார் 2 லட்சம் குறைவாக உள்ளது.

2023-ஆம் ஆண்டு டிசம்பர் 25-ஆம் தேதிக்குள் சபரிமலைக்கு வந்திருந்த பக்தர்களின் எண்ணிக்கை 28.42 லட்சம் மட்டுமே. நடப்பாண்டு சீசன் தொடக்கத்தில் அதிகப்படியான பக்தர்கள் வருகையால், கேரள உயர் நீதிமன்ற உத்தரவுப்படி ஆன்லைன் மற்றும் நேரடி முன்பதிவுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இந்நிலையில், நாளை காலை 10.10 மணி முதல் 11.30 மணி வரை மண்டல பூஜைகள் நடைபெறவுள்ளன. வழக்கமான பூஜைகள் முடிந்த பின் இரவு 11 மணிக்கு நடை சாத்தப்பட்டு, இவ்வருட 41 நாள் மண்டல காலம் நிறைவடையும். அதன் பின்னர், மகரவிளக்கு பூஜைகளுக்காக வரும் டிசம்பர் 30-ஆம் தேதி மாலை 5 மணிக்கு சபரிமலை கோவில் நடை மீண்டும் திறக்கப்படும்.

பக்தர்களின் வருகையை கட்டுப்படுத்தும் வகையில், இன்று 30 ஆயிரம் பேருக்கும் நாளை 35 ஆயிரம் பேருக்கும் மட்டுமே ஆன்லைன் முன்பதிவில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், உடனடி முன்பதிவு மூலம் தினமும் 2 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது.

மண்டல பூஜையை முன்னிட்டு சபரிமலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு, பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு, அடுத்த சில நாட்களில் பக்தர்கள் வருகை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.