தென் மண்டல ஆதியோகி ரத யாத்திரை – முக்கிய திருத்தலங்கள் வழியாக பயணம்

கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெறவுள்ள மஹாசிவராத்திரி விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் ஆதியோகி ரத யாத்திரை நடைபெறுகிறது. இந்த யாத்திரையை தென் கைலாய பக்தி பேரவை மற்றும் தமிழ்நாட்டின் முக்கிய பாரம்பரிய ஆதீனங்கள் இணைந்து நடத்துகின்றன. மாநிலத்தின் நான்கு திசைகளிலும் பயணிக்க உள்ள ஆதியோகி ரதங்களை, அந்தந்த ஆதீனங்களின் குருமகாசந்நிதானங்கள் தொடங்கி வைக்கின்றனர்.

அந்த வகையில், தென் மண்டலத்திற்கான ஆதியோகி ரத யாத்திரை மயிலாடுதுறையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொடங்கப்பட்டது. தருமபுரம் ஆதீனத்தின் 27வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், ஆதியோகிக்கு தீப ஆரத்தி காட்டி யாத்திரையை ஆரம்பித்தார்.

இந்த யாத்திரை மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், திருப்பரங்குன்றம் சத்தியகிரீஸ்வரர் கோயில், திருவேடகம் ஏடகநாதர் கோயில், திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் கோயில், காளையார் கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோயில், திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயில், பிரான்மலை கொடுங்குன்றநாதர் கோயில், திருவாடானை ஆதிரத்தினேஸ்வரர் கோயில், ராமேஸ்வரம் ராமநாதர் கோயில், உத்திரகோசமங்கை மங்களநாதர் கோயில், குற்றாலம் குற்றாலநாதர் கோயில், திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் உள்ளிட்ட பல முக்கிய பாடல் பெற்ற திருத்தலங்கள் வழியாகச் செல்ல உள்ளது.

முன்னதாக, மேற்கு மண்டலத்திற்கான ஆதியோகி ரத யாத்திரை கோவையில் உள்ள ஆதியோகி முன்பு கடந்த டிசம்பர் 17ஆம் தேதி தொடங்கப்பட்டது. தவத்திரு பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளாரும், தவத்திரு சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகளும் அந்த யாத்திரையை ஆரம்பித்தனர்.

ஆதியோகி ரதங்கள் 7 அடி உயரமுடைய ஆதியோகி திருவுருவச் சிலையுடன் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் நான்கு ரதங்கள் தமிழ்நாட்டின் நான்கு திசைகளிலும் பயணிக்கின்றன. இரண்டு மாத காலத்தில், இவை 1,000க்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் 250க்கும் மேற்பட்ட பாடல் பெற்ற சிவத்தலங்கள் வழியாக சுமார் 30,000 கிலோமீட்டர் பயணிக்க உள்ளன.

ஈஷாவில் மஹாசிவராத்திரி விழா பிப்ரவரி 15ஆம் தேதி கோலாகலமாக நடைபெற உள்ளது. கோவைக்கு நேரில் வர முடியாத பக்தர்களும் தங்கள் ஊர்களிலேயே ஆதியோகியை தரிசிக்க வாய்ப்பு பெறுவதற்காக இந்த ரத யாத்திரை ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.

இதனுடன், ‘சிவ யாத்திரை’ எனப்படும் பாத யாத்திரையையும் சிவாங்கா பக்தர்கள் மேற்கொள்கின்றனர். தமிழ்நாடு, தெலங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து, ஆதியோகி சிவன் திருவுருவம் தாங்கிய தேர்களை இழுத்தபடி அவர்கள் கோவைக்கு வருகிறார்கள். மேலும், 63 நாயன்மார்களின் திருவுருவங்களை தாங்கிய தேருடன் அடியார்கள் பாத யாத்திரையாக ஈஷா வளாகத்துக்கு வருகை தர உள்ளனர்.