மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வு விவகாரம் தொடர்ந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த மே மாதம் 3-ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, அந்தத் தேர்வை ரத்து செய்வதாகத் தேசிய தேர்வு முகமை கடந்த மே 12-ஆம் தேதி அறிவித்தது. இதனைத் தொடர்ந்து, ஜூன் 21-ஆம் தேதி நீட் மறுதேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
மறுதேர்வை எதிர்த்து வழக்கு
தேசிய தேர்வு முகமையின் இந்த மறுதேர்வு அறிவிப்பை எதிர்த்தும், அதனை ரத்து செய்யக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இன்று நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதி மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்றது.
ஜூலைக்கு ஒத்திவைப்பு
வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பான மனுவை வரும் ஜூலை மாதம், நீதிபதி நரசிம்மா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர். இதனால், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஜூன் 21-ஆம் தேதி நடைபெறவிருக்கும் மறுதேர்வு குறித்து மாணவர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
வினாத்தாள் கசிவு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், மறுதேர்வை ரத்து செய்யக் கோரும் இந்த வழக்கு மருத்துவக் கல்வி சேர்க்கை தொடர்பான முக்கியத் திருப்பங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.