மும்பை,
இந்தியா – தென் ஆப்பிரிக்கா இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் இரண்டாவது ஆட்டம் நியூசண்டிகாரில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அதன்படி பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 213 ரன்கள் குவித்தது. டி காக் 90 ரன்கள் அடித்து அணியின் இன்னிங்சை முன்னெடுத்தார். இந்தியா தரப்பில் வருண் சக்ரவர்த்தி 2 விக்கெட்டுகள் எடுத்தார்.
பின்னர் 214 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 19.1 ஓவர்களில் 162 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் தென் ஆப்பிரிக்கா 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியில் திலக் வர்மா 62 ரன்கள் அடித்து சிறப்பாக விளையாடினார். தென் ஆப்பிரிக்கா அணியின் பார்த்மேன் 4 விக்கெட்டுகள் எடுத்து இந்தியாவின் ரன் சேர்க்கையை கட்டுப்படுத்தினார். டி காக் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்த தோல்விக்கு இந்திய அணியின் முன்னணி வீரர்களான கேப்டன் சூர்யகுமார் யாதவ் (5 ரன்) மற்றும் துணை கேப்டன் சுப்மன் கில் (கோல்டன் டக்) ஆகியோரின் மோசமான பேட்டிங் காரணமாக இருந்தது என விமர்சகர்கள் கூறுகின்றனர். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருவரும் அரைசதம் அடித்து ஏறக்குறைய ஒரு வருடமாகி விட்டது. குறிப்பாக சூர்யகுமார் கடந்த 20 இன்னிங்சில் ஒரு அரைசதமும் பதிவு செய்யவில்லை. சுப்மன் கில்லும் டி20 வடிவில் தொடர்ந்து ஜொலிக்காததால், அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சனை அணியில் சேர்க்க வேண்டும் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், சூர்யகுமார் யாதவ் மற்றும் சுப்மன் கில் இருவரும் விரைவில் மீண்டும் பார்முக்கு திரும்புவார்கள் என இந்திய துணை பயிற்சியாளர் ரியான் டென் டோஷேட் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
“கடந்த ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்திற்குப் பிறகு சுப்மன் கில்லின் பேட்டிங்கில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அவர் டி20 வடிவில் சிறப்பாக விளையாடும் திறன் கொண்டவர். முதல் இரண்டு போட்டிகளில் அவர் ஏமாற்றியிருந்தாலும், அடுத்த ஆட்டங்களில் நிச்சயம் நன்றாக விளையாடுவார். முதல் ஆட்டத்தில் நாங்களே அவரை அதிரடியாக ஆடச் சொன்னோம். கட்டாக் மைதானம் பேட்டிங்கிற்கு ஏற்றதல்ல. இரண்டாவது ஆட்டத்தில் அவர் ஒரு நல்ல பந்தில் விக்கெட்டை இழந்தார். பார்மில் இல்லாதபோது இத்தகைய விஷயங்கள் நடக்கும். ஆனால் அவரது தரம் எங்களுக்கு தெரியும். ஐபிஎல் சாதனைகள் அதற்கு சாட்சி.
சூர்யாவுக்கும் இதே நிலை. தரமான வீரர்களை ஆதரிப்பது அவசியம். அவர்களுக்கு தேவையான நேரம் கொடுக்கப்பட்டால் அவர்கள் மீண்டும் பார்முக்கு திரும்புவார்கள். அணியின் நிர்வாகம் அவர்களுக்கு நம்பிக்கை அளிப்பது போல, ரசிகர்களும் வெளியில் இருந்து ஆதரவு தர வேண்டும். சரியான நேரத்தில் இருவரும் மீண்டு வருவார்கள் என எனக்கு முழு நம்பிக்கை உள்ளது” என அவர் தெரிவித்தார்.