டி20 உலகக் கோப்பை 2026 – இந்திய அணியின் விக்கெட் வேட்டையன் குறித்து இர்பான் பதான் கணிப்பு

மும்பை: 10வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி முதல் மார்ச் 8ஆம் தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ளது. உலகம் முழுவதும் 20 அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டி, 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி, தனது தொடக்க லீக் ஆட்டத்தில் பிப்ரவரி 7ஆம் தேதி மும்பையில் அமெரிக்காவை எதிர்கொள்கிறது. அடுத்ததாக பிப்ரவரி 12ஆம் தேதி டெல்லியில் நமீபியாவுடன் மோதுகிறது. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் இந்தியா–பாகிஸ்தான் மோதல் பிப்ரவரி 15ஆம் தேதி கொழும்பில் நடைபெற உள்ளது. கடைசி லீக் ஆட்டத்தில், இந்திய அணி பிப்ரவரி 18ஆம் தேதி ஆமதாபாத்தில் நெதர்லாந்தை எதிர்கொள்கிறது.

இந்த தொடருக்கான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணியை சமீபத்தில் தேர்வு குழுவினர் அறிவித்தனர். அஜித் அகர்கர் தலைமையிலான குழு, கேப்டன் சூர்யகுமார் மற்றும் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீருடன் ஆலோசித்து அணியை இறுதி செய்தது.

இந்த உலகக் கோப்பை குறித்து பல முன்னாள் வீரர்கள் தங்களது கணிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். அந்த வரிசையில், இந்திய முன்னாள் வீரரான இர்பான் பதான், அதிக விக்கெட் வீழ்த்தும் வாய்ப்புள்ள பவுலர் குறித்து தனது கருத்தை பகிர்ந்துள்ளார்.

அவர் கூறியதாவது: “இந்திய பந்துவீச்சு கூட்டணி அற்புதமாக உள்ளது. பும்ரா மற்றும் வருண் சக்கரவர்த்தி மீது மிகுந்த பொறுப்பு உள்ளது. குறிப்பாக, வருண் சக்கரவர்த்தி சமீப காலமாக சிறப்பாக பந்து வீசி வருகிறார். அவரது பந்துவீச்சு திறமை, வித்தியாசமான பந்துகள், மற்றும் தன்னம்பிக்கை காரணமாக, இந்த உலகக் கோப்பையில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரராக மாறுவார் என்று நான் நம்புகிறேன். வருண் இந்திய அணிக்கு ஒரு துருப்புச் சீட்டாக இருக்க முடியும். அவர் காட்டும் தன்னம்பிக்கை மிகவும் உயர்ந்தது” என இர்பான் பதான் வலியுறுத்தினார்.

இந்த கருத்து, ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணியின் பந்துவீச்சு பிரிவு, குறிப்பாக பும்ரா மற்றும் வருண் சக்கரவர்த்தி, இந்த உலகக் கோப்பையில் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றுவார்கள் என முன்னாள் வீரர்கள் கணிக்கின்றனர்.