நடிகர் ஸ்ரீனிவாசன் மறைவு – அரசு மரியாதையுடன் அடக்கம், பார்த்திபன் பகிர்ந்த நினைவுகள்

கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த பிரபல நடிகரும், இயக்குநரும், திரைக்கதை ஆசிரியருமான ஸ்ரீனிவாசன் (வயது 69) உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். கடந்த 48 ஆண்டுகளாக மலையாள திரையுலகில் முன்னணி கலைஞராக திகழ்ந்த இவர், நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாப்பாத்திரங்கள் மூலம் தனித்துவமான இடத்தைப் பெற்றிருந்தார். இயக்குநராகவும், திரைக்கதை ஆசிரியராகவும் பல படைப்புகளை வழங்கிய அவர், மலையாள சினிமாவின் முக்கியமான தூண்களில் ஒருவராகக் கருதப்பட்டார்.

சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ஸ்ரீனிவாசன், எர்ணாகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல், நேற்றுமுன்தினம் காலை அவர் காலமானார். இவரது மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. ரசிகர்கள், சக நடிகர்கள், இயக்குநர்கள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்தனர்.

மோகன்லால், மம்முட்டி, சூர்யா உள்ளிட்ட பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். தமிழிலும் ‘லேசா லேசா’, ‘புள்ளக்குட்டிக்காரன்’ போன்ற படங்களில் நடித்திருந்ததால், தமிழ் ரசிகர்களிடமும் அவர் தனித்துவமான இடத்தைப் பெற்றிருந்தார்.

இதையடுத்து, ஸ்ரீனிவாசனின் சொந்த ஊரான எர்ணாகுளம் மாவட்டத்தின் உதயம்பேரூரில் உள்ள அவரது வீட்டில், அரசு மரியாதையுடன் நேற்று உடல் அடக்கம் செய்யப்பட்டது. அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்ட இந்த நிகழ்வில், பெருமளவிலான மக்கள் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட நடிகர் மற்றும் இயக்குநர் பார்த்திபன், பின்னர் மம்முட்டியைச் சந்தித்து, ஸ்ரீனிவாசனுடனான நினைவுகளை பகிர்ந்துகொண்டார். தனது சமூக வலைதளத்தில் அவர் எழுதிய பதிவில், “ஒரு நீண்ட தூக்கத்தின் துக்கத்தை, ஒரு சிறிய தூக்கம் லேசாய்க் களைந்தெறிய, கண்களைத் துடைத்துக் கொண்டு அடுத்ததில் விரைகிறோம். துக்க வீட்டில் நான் வெறுமையுடன் உரையாடிக் கொண்டிருப்பதை தயாரிப்பாளர் ஆன்டோ ஜோசப் மம்முட்டி சாரிடம் சொல்லியிருப்பார் போல. ஸ்ரீனிவாசனின் இறுதி யாத்திரைக்கு நெருப்புப் படுக்கை தயாராகிக் கொண்டிருக்கும் போது, அதையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த என்னால், அந்த உஷ்ணத்தை ஸ்ரீனியின் உடல் உணராது என்பதும் சுட்டது. அதற்கு மேல் அங்கிருக்க இயலாமல் வருத்தத்துடன் வெளியேறியபோது, வாசலில் மம்முட்டியின் தயாரிப்பாளர் ஆறுதலாய் அழைத்துச் சென்றார். ஸ்ரீனியின் நினைவுகளை இருவரும் பகிர்ந்துகொண்டபடி மாலைவரை அவரது அன்பான உபசரிப்பில் இருந்தோம். நட்பிற்கு மொழி பேதங்கள் இல்லை. சில தவறுகள் அச்சேறிய பிறகு சரி செய்தல் இயலாது” என உணர்ச்சியுடன் குறிப்பிட்டார்.

ஸ்ரீனிவாசனின் மறைவு, மலையாள சினிமாவுக்கு மட்டுமல்ல, இந்திய திரையுலகத்திற்கே ஒரு பெரிய இழப்பாகக் கருதப்படுகிறது.