தமிழகத்தை ஊழல் மாநிலமாக்கிய திமுக அரசு: பாஜக தேசிய தலைவர் நிதின் கபூர் குற்றச்சாட்டு
ராமநாதபுரம்: வளர்ச்சியைப் பற்றி கவலைப்படாமல் ஊழலில் நம்பர் ஒன் மாநிலமாக தமிழகத்தை திமுக அரசு மாற்றியுள்ளதாக பாஜக தேசிய தலைவர் நிதின் கபூர் குற்றம் சாட்டியுள்ளார்.

ராமநாதபுரத்தில் பாஜக வேட்பாளர் ஜி.பி.எஸ்.கே. நாகேந்திரனை ஆதரித்து அரண்மனை அருகே நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய நிதின் கபூர், திமுக, காங்கிரஸ் ஊழல் செய்து தமிழகத்தை ஏழ்மை நிலைக்குக் கொண்டு செல்வதாக விமர்சித்தார். தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்ததும் போதை கலாச்சாரம் அடியோடு ஒழிக்கப்படும் என உறுதியளித்தார்.
தமிழகத்தில் அளவுகடிமாக சைபர் குற்றங்கள் நடக்கின்றன; ஐ.எஸ்.ஐ. மூலம் தீவிரவாதம் வளர்க்கப்படுகிறது என கூறினார். உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்பதற்கு அனுமதிக்காத தமிழக அரசு வளர்ச்சியைப் பொருட்படுத்தவில்லை என சாடினார்.
கருணாநிதி, ஸ்டாலின் என ஒரு குடும்பத்துக்காக மட்டும் இந்த அரசு பாடுபடுகிறது. இந்தக் குடும்ப ஆட்சியை ஒழிக்க வேண்டும் என அழைப்பு விடுத்தார். காசியைப் போல ராமேசுவரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்; ஜல்ஜீவன் திட்டத்தில் முறைகேடு செய்யப்படுகிறது என விமர்சித்தார்.
ஈரானில் தவித்த ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் உள்ளிட்ட 700-க்கும் மேற்பட்ட இந்திய மீனவர்களை பிரதமர் மீட்டுள்ளதாக நினைவூட்டினார். பெண்கள், விவசாயிகள், மீனவர்கள் என அனைத்துத் தரப்பினருக்கான அரசு அமைக்க தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாக்களியுங்கள் என வலியுறுத்தினார்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன், நடிகர் சரத்குமார், மேலிட இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மாவட்ட தலைவர் முரளிதரன், வேட்பாளர் ஜி.பி.எஸ்.கே. நாகேந்திரன் ஆகியோர் பேசினர்.