டிசம்பர் முதல் வீடு தேடி ரேஷன் – கூடுதலாக 2.27 லட்சம் அட்டைதாரர்களுக்குத் திட்டம் விரிவாக்கம்

சென்னை | 27 நவம்பர் 2026

ரேஷன் பொருட்களை வீடுகளுக்கே நேரடியாகக் கொண்டு சென்று வழங்கும் திட்டத்தைத் தமிழக அரசு விரிவுபடுத்தியுள்ளது. அதன்படி, கூடுதலாக 2.27 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு டிசம்பர் முதல் வீடுகளிலேயே பொருட்கள் வழங்கப்பட உள்ளன. இந்த விரிவாக்கத்தின் மூலம் சுமார் 4.89 லட்சம் பேர் பயனடைவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருநங்கையர், கைம்பெண்கள், முன்னாள் ராணுவத்தினர் உள்ளிட்டோர் புதிதாகத் திட்டத்தில் சேர்க்கப்படுகின்றனர். இவர்களுக்கான வீட்டு விநியோகத்தை மேற்கொள்ள ஆண்டுக்கு ரூ.11 கோடி ஒதுக்கித் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. திட்டத்தை மேலும் விரிவுபடுத்துவது குறித்து தமிழக பட்ஜெட்டில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது டிசம்பர் முதல் கூடுதல் அட்டைதாரர்களுக்கு விநியோகம் தொடங்க உள்ளது.

தனியாக வசிக்கும் முதியவர்கள் ரேஷன் கடைக்குச் சென்று பொருட்களைப் பெற்று வருவதில் சிரமத்தைச் சந்திப்பதைக் கருத்தில் கொண்டு, 2025 ஆகஸ்டில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் 70 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கு இந்த வசதி வழங்கப்பட்டது. பின்னர் வயது வரம்பு தளர்த்தப்பட்டு, 65 வயதுக்கு மேற்பட்டவர்களும் திட்டத்தில் சேர்க்கப்பட்டனர். தற்போதுள்ள திட்டத்தின் கீழ் 19.30 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வீடுகளிலேயே பொருட்கள் வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கமான விநியோக முறையில், அட்டைதாரர்கள் ரேஷன் கடைக்கு நேரில் சென்று விரல் ரேகையைப் பதிவு செய்து பொருட்களைப் பெறுகின்றனர். வீடு தேடி வழங்கும் திட்டத்தில், ரேஷன் கடை ஊழியர்கள் மாதத்தின் முதல் வாரத்தில் வாகனங்களில் பொருட்களை எடுத்துச் சென்று பயனாளிகளின் வீடுகளில் வழங்குகின்றனர்.