தமிழக ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு கோதுமை மாவை கிலோ ₹15க்கு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

வெளிச்சந்தையில் கோதுமை மாவின் விலை சராசரியாக கிலோவுக்கு ₹60 வரை உள்ள நிலையில், குறைந்த விலையில் தரமான கோதுமை மாவை வழங்கும் நோக்கில் இந்த திட்டம் கொண்டு வரப்படுகிறது.

கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட்டில், பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் பாக்கெட்டில் கோதுமை வழங்கும் முன்னோடி திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக, கோதுமையை மாவாக அரைத்து பாக்கெட்டுகளில் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்காக மத்திய அரசிடமிருந்து கோதுமை கொள்முதல் செய்து, ஆலைகளில் மாவாக அரைத்து, பின்னர் ரேஷன் கடைகள் வழியாக விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மற்ற மாநிலங்களில் கோதுமை மாவு எவ்வளவு விலையில் வழங்கப்படுகிறது என்பதையும் ஆய்வு செய்து, அதைவிட குறைந்த விலையில் கிலோ ₹15 என்ற விலையில் வழங்க திட்டமிட்டுள்ளதாக கூட்டுறவு மற்றும் உணவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக மத்திய அரசின் ‘Bharat Atta’ திட்டத்தின் கீழ் கோதுமை மாவு கிலோ ₹27.50க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது தமிழக அரசு அதைவிட குறைந்த விலையில் ரேஷன் கடைகள் மூலம் வழங்க திட்டமிட்டுள்ளது.

இந்த திட்டம் முழுமையாக அமலுக்கு வந்தால், ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களின் மாதாந்திர உணவுச் செலவை குறைக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.