தமிழ்நாடு முழுவதும் உள்ள ரேஷன் கடை ஊழியர்கள் இன்று முதல் கருப்பு உடை மற்றும் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்கம் அறிவித்துள்ள இந்த போராட்டம் செப்டம்பர் 5 முதல் 10 வரை நடைபெறுகிறது.

ரேஷன் பொருட்கள் விநியோகத்தில் தற்போது பயன்படுத்தப்படும் Bluetooth அடிப்படையிலான முறையை நிறுத்தி, PoS இயந்திரம் மூலமாக நேரடி scanning முறையை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்பது ஊழியர்களின் முக்கிய கோரிக்கையாகும். மேலும் ஒவ்வொரு கடைக்கும் தேவையான அளவு கூடுதல் பணியாளர்கள் மற்றும் PoS இயந்திரங்கள் வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தாயுமானவர் திட்டத்தை செயல்படுத்தியதற்கான நிலுவையில் உள்ள ₹200 ஊக்கத் தொகையை வழங்க வேண்டும் என்றும் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. அதோடு, காலிப் பணியிடங்களை நிரப்புதல், வேலை நேரத்தை ஒரே மாதிரியாக நிர்ணயித்தல் உள்ளிட்ட பணிச்சுமை தொடர்பான கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.

e-KYC முடிக்காத குடும்ப அட்டைகளை தற்காலிகமாக முடக்கி, biometric authentication முடிந்த பின்னர் மீண்டும் செயல்படுத்தும் நடைமுறையையும் சங்கம் கோரியுள்ளது. பெண்கள், கர்ப்பிணி ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயதான பணியாளர்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்க வேண்டும் என்பதும் கோரிக்கைகளில் இடம்பெற்றுள்ளது.

ரேஷன் கடை ஊழியர்கள் எதிர்கொள்ளும் நடைமுறை சிக்கல்களை அரசின் கவனத்திற்கு கொண்டு வந்து, உடனடி தீர்வு பெறவே இந்த போராட்டம் நடத்தப்படுவதாக சங்க பொதுச்செயலாளர் பி. தினேஷ்குமார் தெரிவித்துள்ளார்.