
மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் கம்பூர் ஊராட்சியில் தூய்மைப் பணியாளராக பணியாற்றி வரும் பட்டியலினத்தைச் சேர்ந்த சசிகலா, பணியிடத்தில் எதிர்கொண்டதாக கூறப்படும் தீண்டாமை மற்றும் சாதியப் பாகுபாடு காரணமாக தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சசிகலா, தமக்கு இழைக்கப்பட்டதாக கூறப்படும் சாதியக் கொடுமைகள் குறித்து அதிகாரிகளிடம் முறையிட்டிருந்தபோதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார். மாவட்ட ஆட்சியர் வரையிலும் புகார் சென்றதாகவும், அதற்குப் பிறகும் நடவடிக்கை இல்லாதது ஏற்க முடியாதது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், “தீண்டாமையை அரசே ஊக்குவிக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது” என்று அவர் கடுமையாக கேள்வி எழுப்பியுள்ளார். அரசு பதவிகளில் இருப்பவர்கள் சமூக நல்லிணக்கத்துக்கு துணை நிற்க வேண்டியவர்கள்; ஆனால் அவர்களே சாதியப் பாகுபாட்டை முன்னெடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்தால் அது மிகக் கடுமையான விஷயம் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் தமிழக அரசு முழுமையான விசாரணை நடத்தி, உண்மை நிலையை வெளிக்கொண்டு வர வேண்டும் என்றும், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.