ஓ.பன்னீர்செல்வம் அணியின் புதிய முடிவு: தவெகவுடன் கூட்டணி விருப்பம்
சென்னை: அதிமுக ஒன்றிணைந்தால்தான் சட்டசபை தேர்தலில் திமுகவை வீழ்த்த முடியும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்த ஓ.பன்னீர்செல்வம், திடீரென தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளார். “அதிமுகவுடன் இனி இணையப்போவதில்லை” என்று அவர் தடாலடியாக அறிவித்தது, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஓ.பன்னீர்செல்வம், மத்திய ஆளுங்கட்சியான பாஜகவின் ஆதரவு தனக்கு இருப்பதாக நம்பியிருந்தார். அதிமுகவில் மீண்டும் இணையலாம் என்ற நம்பிக்கையுடன் பாஜக மேலிடத்திடம் முயற்சி மேற்கொண்டபோதும், எடப்பாடி பழனிசாமி அதனைத் தெளிவாக மறுத்துவிட்டார். இதனால், அதிமுகவில் இணைய முடியாவிட்டாலும், அதிமுக அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெறலாம் என அவர் நினைத்தார். ஆனால், சட்டசபை தேர்தலில் அதிமுக–பாஜக கூட்டணியில் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு 3 தொகுதிகள் மட்டுமே வழங்க முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவல், ஓ.பன்னீர்செல்வம் அணியினரை அதிர்ச்சியடையச் செய்தது. இதன் பின்னணியில், சென்னையில் அதிமுக தொண்டர் உரிமை மீட்பு கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில், சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி அமைக்கலாம் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. நிர்வாகிகளிடம் கருத்து கேட்கப்பட்டு, அதற்கான படிவமும் வழங்கப்பட்டது. அந்த படிவத்தில் திமுக மற்றும் தவெக ஆகிய இரு கட்சிகளின் பெயர்கள் இடம்பெற்றிருந்ததாக கூறப்படுகிறது.
அந்த கருத்து கணிப்பில், மாவட்டச் செயலாளர்கள் 80 பேரில் 72 பேர் தவெகவுடன் கூட்டணி அமைக்க விருப்பம் தெரிவித்தனர். மாநில நிர்வாகிகள் 60 பேரில் 55 பேர் தவெகவுடன் இணைய விருப்பம் தெரிவித்தனர். மொத்தத்தில், நிர்வாகிகளில் 90 சதவீதம் பேர் தவெகவுடன் கூட்டணி அமைப்பதே சிறந்தது எனக் கூறியுள்ளனர். சிலர் திமுக கூட்டணியில் சேர்வதே எதிர்காலத்திற்கு நல்லது என கருத்து தெரிவித்திருந்தாலும், பெரும்பான்மையானோர் தவெகவையே தேர்வு செய்துள்ளனர்.
இதனால், தொண்டர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், ஓ.பன்னீர்செல்வம் “அதிமுகவில் இனி இணையப்போவதில்லை” என்று அறிவித்துள்ளார். மேலும், தவெகவுடன் விரைவில் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கவும் அவரது தரப்பு முடிவு செய்துள்ளது. தவெக அணியில் 38 தொகுதிகளை கேட்டுப் பெறும் வகையில், ஓ.பன்னீர்செல்வம் அணியினர் தயாராகி வருகின்றனர்.
இந்த மாற்றம், தமிழக அரசியல் சூழலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.