மதுரை:

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றாத அதிகாரிகளுக்கு எதிராக தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின் போது அவர் கூறியதாவது:

“எனது உத்தரவால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். கோயில் தரப்பு வழக்கறிஞர் சில விஷயங்களை உணர்ச்சி வசப்பட்டு கூறியிருக்கலாம்,” என்றார்.

அரசு தரப்பு வழக்கறிஞர், “இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. விளக்கமளிக்க நோட்டீஸ் அனுப்ப வேண்டும். சட்டப்படி நான்கு வார அவகாசம் தரப்பட வேண்டும்,” எனக் கூறினார். அதற்கு நீதிபதி, “நான்கு வாரம் காத்திருந்து பதில் கிடைத்தால் என்ன செய்வீர்கள்?” எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு அரசு வழக்கறிஞர், “சட்டப்படி உரிய பதில் அளிப்போம்” என்றார். இதனைத் தொடர்ந்து, “நீதிமன்றத்திற்கு உரிய மரியாதை வழங்கப்பட வேண்டும்,” என நீதிபதி எச்சரித்தார்.

வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜரான போலீஸ் கமிஷனர் லோகநாதனிடம், நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த எடுத்த நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “பேரிகேடுகளை அமைத்து மதியம் 3.30 மணியிலிருந்து செயல்பாடு தொடங்கினோம். கூட்டம் அதிகரித்து பிரச்சனை உருவானதால், சட்டம்-ஒழுங்கு நிலையை கருத்தில் கொண்டு கலெக்டர் 144 தடை உத்தரவை பிறப்பித்தார்,” என்று தெரிவித்தார். இதற்கு நீதிபதி, “கலெக்டருக்கு பரிந்துரை எப்போது அனுப்பப்பட்டது?” எனக் கேட்க, கமிஷனர் “மாலை 5.30 மணியளவில் அனுப்பினோம்,” என்று பதிலளித்தார்.

அரசு தரப்பு, “எங்கள் நோக்கம் நீதிமன்ற உத்தரவை பின்பற்றாமல் செய்வதல்ல. நிலைமை பதற்றமாக இருந்ததால் மட்டுமே 144 தடை விதிக்கப்பட்டது. போலீஸ் கமிஷனரின் செயல்பாடு பாராட்டத்தக்கது; யாருக்கும் காயம் ஏற்படாமல் செயல்பட்டார்,” என விளக்கம் அளித்தது.

இதையடுத்து நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் கூறியதாவது:

“மனுதாரர் CISF பாதுகாப்புடன் மலைக்கு செல்லும்போது, போலீஸ் கமிஷனர் அவரை தடுத்துள்ளார். 144 தடை உத்தரவை காரணம் காட்டி, நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த முடியாது என தெரிவித்துள்ளார். இது நீதிமன்ற உத்தரவை புறக்கணித்ததாகும். மாவட்ட கலெக்டர், நீதிமன்றத்தைவிட தாம் பெரியவர் என எண்ணியுள்ளார். எனவே, திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.

இன்று மாலை 6.30 மணிக்குள் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட வேண்டும். இந்த செயல்பாட்டுக்கு போலீஸ் கமிஷனர் முழு பாதுகாப்பு வழங்க வேண்டும். உத்தரவு நிறைவேற்றப்பட்டதற்கான அறிக்கையை நாளை தாக்கல் செய்ய வேண்டும்,” என்றார்.

அத்துடன், “உத்தரவைப் பின்பற்றத் தவறினால் கடும் நடவடிக்கை எடுக்க நான் தயங்கமாட்டேன்,” என்றும் நீதிபதி தீவிரமாக எச்சரித்தார்.