ஈரோடு / திண்டுக்கல்:
தமிழக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மூன்றாம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் ஈரோடு அமைப்புச் செயலாளருமான செங்கோட்டையன் பங்கேற்று உரையாற்றினார். இந்த நிகழ்வில் அவர், தமிழக அரசியல் வரலாறையும், தற்போதைய அரசியல் சூழலையும் ஒப்பிட்டுப் பேசினார்.

அந்த கூட்டத்தில் செங்கோட்டையன் பேசுகையில், “முதன்முதலில் எம்.ஜி.ஆர். அரசியலுக்கு வந்தபோது, சினிமா நடிகர் என்பதால் இவரது அரசியல் பயணம் 100 நாட்கள்தான் நீடிக்கும் என்று பலர் விமர்சித்தனர். ஆனால், அவர் உயிருடன் இருந்த காலம் முழுவதும் தமிழ்நாட்டின் முதல்வராகவும், மக்கள் மனங்களில் எம்.ஜி.ஆராகவும் நிலைத்திருந்தார். அதன்பிறகு பொறுப்பேற்ற ஜெயலலிதா இருந்த வரையில் அந்த இயக்கத்தை யாராலும் அசைக்க முடியவில்லை” என்று குறிப்பிட்டார்.

மேலும், “இன்றும், நாளையும் தமிழ்நாட்டை ஆளப்போகிறேன், எதிர்கால தமிழ்நாட்டை உருவாக்கப் போகிறேன் என்று மக்களின் நம்பிக்கையாக நிற்கக்கூடியவர் வெற்றிக் கழகத்தின் தலைவர் புரட்சித் தளபதி. இதை நாம் அனைவரும் எண்ணிப் பார்க்க வேண்டும்” என்று அவர் தெரிவித்தார். இதன்மூலம், நடிகர் விஜய்யை ‘புரட்சித் தளபதி’ என்று தொடர்ந்து அழைத்து வரும் செங்கோட்டையனின் கருத்துகள் அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றன.

இதுபோல பல்வேறு மேடைகளில் நடிகர் விஜய்யை புரட்சித் தளபதி என குறிப்பிடுவது குறித்து, அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், செங்கோட்டையன் கருத்துகளுக்கு கடும் விமர்சனம் முன்வைத்தார்.

திண்டுக்கல் சீனிவாசன் கூறுகையில், “இதுகுறித்து நான் கண்ணீர் விடுவதைத்தவிர வேறு ஒன்றும் சொல்ல முடியாது. எங்களுடன் இருந்த ஒரு பெரிய மனிதர் இவ்வளவு கீழ்த்தரமாகப் போய்விட்டாரே என்று நினைத்தால் கண்ணீர்தான் வருகிறது. ஒவ்வொருவருக்கும் ஒரு தகுதி இருக்கும். எல்லோரும் ஒரே தட்டில் ஜால்ரா அடிப்பார்கள். ஆனால், அவர் தாம்பளத்தில் அடிக்கிறார்” என்று கடுமையாக விமர்சித்தார்.

மேலும் அவர், “அவ்வாறு செய்தும் அவரை நான்காவது, ஐந்தாவது இடத்தில்தான் உட்கார வைத்துள்ளனர். எங்களுக்கும் அந்த நிலை வந்துவிடக்கூடாது என்பதால்தான் நாங்கள் கண்ணீர் வடிக்கிறோம். அவரது அரசியல் நிலை தாழ்ந்து விட்டது” என்று தெரிவித்தார். திண்டுக்கல் சீனிவாசனின் இந்தக் கருத்துகள், அதிமுக மற்றும் தவெக ஆதரவாளர்களிடையே புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக அரசியல் வட்டாரங்களில் பல்வேறு கருத்துகள் வெளிப்பட்டு வருகின்றன. நடிகர் விஜய்யின் அரசியல் பயணம், தவெக கட்சியின் எதிர்காலத் திட்டங்கள் மற்றும் அதிமுகவின் முன்னாள் தலைவர்கள் இடையிலான கருத்து வேறுபாடுகள் ஆகியவை, வரும் நாட்களில் தமிழக அரசியலில் மேலும் பேசுபொருளாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.