பாஜக பதவியேற்பு விழாவில் பங்கேற்க மேற்கு வங்கம் வருவேன்: மோடி உறுதி!

கொல்கத்தா: பாஜக அரசின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மேற்கு வங்கத்துக்கு திரும்பி வருவேன் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் இரு கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த 23-ம் தேதி முதல் கட்டம் நடைபெற்றது. நாளை இரண்டாம் கட்டம் நடைபெறுகிறது. இந்த சூழலில் பிரதமர் மோடி மாநிலம் முழுவதும் 16-க்கும் மேற்பட்ட பொதுக்கூட்டங்களில் பங்கேற்று தீவிர பிரச்சாரம் செய்தார்.

தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளான நேற்று, வடக்கு 24 பர்கானா மாவட்டம், பரக்பூரில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி, “மேற்கு வங்கத்தின் பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டேன். எனது பிரச்சாரப் பயணம், சாலை ஊர்வலங்கள் புதிய யாத்திரை போல அமைந்தது. கடந்த 2024 ஜனவரியில் அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட்டது. அப்போது 11 நாட்கள் விரதம் இருந்து தென்னிந்தியா உட்பட பல்வேறு கோயில்களில் வழிபாடு நடத்தினேன். தற்போது அதே உணர்வுடன் மேற்கு வங்கத்தில் பிரச்சாரத்தை நிறைவு செய்கிறேன்.

பண்டைய காலத்தில் அங்கா, பங்கா, கலிங்கா ஆகியவை நமது நாட்டின் மூன்று முக்கிய பிரதேசங்களாக இருந்தன. தற்போது வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க இந்த மூன்று மாநிலங்களும் முக்கிய பங்காற்ற வேண்டும். பிஹார், ஒடிசாவில் பாஜக ஆட்சி நடத்துகிறது. அதேபோல் மேற்கு வங்கத்தில் அதிக இடங்களைக் கைப்பற்றி பாஜக ஆட்சி அமைக்கும். புதிய பாஜக அரசின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மீண்டும் மேற்கு வங்கத்துக்கு வருவேன்” என்றார்.

மேற்கு வங்கத்தில் 15 ஆண்டுகளாக திரிணமூல் காங்கிரஸ் ஆட்சி நடத்துகிறது. ஆனால் மாநிலம் இன்னும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது. பாஜக ஆட்சி அமைந்தால் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி வேகம் பெறும். மாநில அரசு ஊழியர்களுக்கு ஏழாவது ஊதியக் கமிஷன் பரிந்துரைகள் அமல்படுத்தப்படும். காலியிடங்கள் வெளிப்படைத்தன்மையுடன் நிரப்பப்படும். வேலைவாய்ப்புகள் அதிகரிக்கப்படும். குறிப்பாக அறிவாற்றல் சார்ந்த துறைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இதன்மூலம் இளைஞர்கள் வேலை தேடி வெளிமாநிலங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை.

அரசு நிர்வாகத் திறன் மேம்படுத்தப்படும். கொல்கத்தா மெட்ரோ ரயில் வழித்தடம் விரிவாக்கம் செய்யப்படும். உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மறைந்த மூத்த தலைவர் ஷியாம பிரசாத் முகர்ஜியின் கனவை மத்தியில் ஆளும் பாஜக அரசு நிறைவேற்றியது. அவரது விருப்பப்படி 370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டது. மாநிலத்தில் சட்டம், ஒழுங்கு கடுமையாகப் பாதிக்கப்படும். ஊழல் ஒழிக்கப்படும்.

பெண்களின் கல்வி, வருவாய், சுகாதாரம், பாதுகாப்பு, கண்ணியத்தைப் பாதுகாக்க பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றும். மத்திய அரசின் அனைத்து திட்டங்களும் முழுமையாக அமல்படுத்தப்படும். வன்முறை, ஊழல், உரையாடல், வேலைவாய்ப்பின்மை ஆகியவற்றிலிருந்து முழுமையாக விடுபட பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும்” என்று மோடி கூறினார். இந்த உறுதிமொழி பாஜக ஆதரவாளர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது