‘சிறை’ பட முன்னோட்ட விழாவில் தயாரிப்பாளர் லலித் குமார் உரை
சென்னை: நடிகர் விக்ரம் பிரபு தற்போது ‘செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ’ சார்பில் தயாரிப்பாளர் லலித் குமார் தயாரிக்கும் ‘சிறை’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் எல்.கே. அக்ஷய் குமார் மற்றும் அனந்தா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வெற்றிமாறனின் உதவியாளரான சுரேஷ் ராஜகுமாரி இப்படத்தை இயக்கியுள்ளார். வரவிருக்கும் டிசம்பர் 25ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில், ‘சிறை’ திரைப்படத்தின் முன்னோட்ட விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் லலித் குமார், தனது தயாரிப்பு நிறுவனத்தின் வளர்ச்சி, விஜயுடன் ஏற்பட்ட உறவு, மற்றும் திரைப்படத் துறையில் பெற்ற அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்.
அவர் உரையாற்றியபோது, “இன்று உலகம் முழுவதும் ‘7 ஸ்கிரீன் ஸ்டூடியோ’ பிரபலமாக இருக்க ஒரே காரணம் தளபதி விஜய் சார் தான். லாக்டவுன் காலக்கட்டத்தில், மிகப்பெரிய சவால்களை எதிர்கொண்டிருந்த நிலையில், அவர் ‘மாஸ்டர்’ படத்தை எங்களுக்கு கொடுத்தார். அந்த படத்தை சரியான நேரத்தில், சரியான முறையில் வெளியிட முடிந்தது. அதன் வெற்றியே எங்கள் நிறுவனத்திற்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அந்த வெற்றியின் காரணமாகவே, பின்னர் ‘லியோ’ போன்ற பெரிய படங்களை தயாரிக்கும் வாய்ப்பு கிடைத்தது” என்று கூறினார்.
அவர் மேலும், “விஜய் சார் எங்களுக்கு அளித்த நம்பிக்கை, எங்கள் தயாரிப்பு நிறுவனத்தை உலகளவில் அறிமுகப்படுத்தியது. இன்று ‘7 ஸ்கிரீன் ஸ்டூடியோ’ என்ற பெயர் ரசிகர்களிடையே பிரபலமாக இருப்பதற்கான காரணம் அவரின் ஆதரவு. நான் என்றென்றும் தளபதி விஜய் சார் மீது நன்றியுடன் இருப்பேன். அவர் அளித்த வாய்ப்புகள் எங்கள் நிறுவனத்தை உயர்த்தியுள்ளன” என உணர்ச்சியுடன் தெரிவித்தார்.
‘சிறை’ திரைப்படம் குறித்து அவர், “இந்த படம் விக்ரம் பிரபுவின் நடிப்பில் உருவாகியுள்ள ஒரு வித்தியாசமான முயற்சி. புதிய இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி, தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறும் என நம்புகிறேன்” என்றார்.
இந்த விழாவில் கலந்து கொண்ட நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், ரசிகர்கள் அனைவரும் தயாரிப்பாளர் லலித் குமாரின் உரையை பாராட்டினர். குறிப்பாக, விஜயின் ஆதரவு குறித்து அவர் தெரிவித்த நன்றியுணர்வு, நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக அமைந்தது.