📰 ஈரோட்டில் விஜய் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுப்பு – மாற்று இடம் தேடலில் தீவிரம்
ஈரோடு,
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பிரசாரத்தை தீவிரப்படுத்தி வருகிறார். புதுச்சேரியில் நாளை (செவ்வாய்க்கிழமை) பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதன் தொடர்ச்சியாக, வருகிற 16-ந்தேதி ஈரோட்டில் பிரசார பொதுக்கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டது.
இதற்காக, கட்சியின் மாநில நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், நிர்வாகிகளுடன் ஈரோடு கலெக்டர் கந்தசாமியை சந்தித்து மனு அளித்தார். பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும் அனுமதி கோரப்பட்டது.
பவளத்தாம்பாளையம் அருகே 7 ஏக்கர் தனியார் இடம் பொதுக்கூட்டத்திற்காக தேர்வு செய்யப்பட்டிருந்தது. ஆனால், இடபற்றாக்குறை காரணமாக போலீசார் அங்கு அனுமதி மறுத்து, மாற்று இடம் தேடுமாறு அறிவுறுத்தினர்.
இதையடுத்து, பெருந்துறை அருகே மாற்று இடம் தேர்வு செய்ய செங்கோட்டையன், த.வெ.க. நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர், புதிய இடத்தில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி மீண்டும் மனு வழங்கப்பட்டது.