📰 கன்னியாகுமரியில் அய்யப்ப பக்தர்கள் கூட்டம் – சூரிய உதய காட்சி ரசனை

கன்னியாகுமரி,

சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசன் கடந்த மாதம் 17-ந்தேதி தொடங்கியதிலிருந்து, கன்னியாகுமரிக்கு பக்தர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஞாயிறு விடுமுறையையொட்டி இன்று அதிகாலையில், முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடற்கரையில் சூரியன் உதயமாகும் அழகிய காட்சியை காண அய்யப்ப பக்தர்கள் பெருமளவில் திரண்டனர்.

பின்னர், முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி, பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்து, விவேகானந்தர் நினைவு மண்டபத்தை ஆர்வமுடன் பார்வையிட்டனர்.

அதனைத் தொடர்ந்து, கண்ணாடி நடை பாலம் வழியாக சென்று திருவள்ளுவர் சிலையை ரசித்தனர். மேலும் காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவு பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் காலை முதலே பயணிகள் கூட்டம் அலைமோதியது.