விஜய் பிரசாரம்: கூட்டம் நடைபெறும் இடத்திற்கு அருகிலுள்ள பள்ளிக்கு 18ஆம் தேதி விடுமுறை அறிவிப்பு

ஈரோடு மாவட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய் நடத்த உள்ள மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டத்தை முன்னிட்டு, கூட்டம் நடைபெறும் இடத்திற்கு அருகிலுள்ள ஒரு தனியார் பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய், மாவட்டம் தோறும் பொதுமக்களை நேரடியாக சந்திக்கும் வகையில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். அதன் ஒரு பகுதியாக, வரும் வியாழக்கிழமை (18ஆம் தேதி) ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் சரளையில் உள்ள சுங்கச்சாவடி அருகே த.வெ.க. சார்பில் பெரிய அளவிலான பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் விஜய் நேரடியாக கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார்.

கூட்டம் நடைபெறும் இடம் விஜயபுரி அம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலமாகும். அங்கு 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், பாதுகாப்பு மற்றும் ஒழுங்கு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த பொதுக்கூட்டத்துக்கு அனுமதி வழங்கும் முன், போலீஸ் துறையால் த.வெ.க.வினரிடம் 84 கேள்விகள் கேட்கப்பட்டன. அவற்றுக்கான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டபோதும், கோவில் நிர்வாகத்திடம் இருந்து தடையில்லா சான்று பெறப்படவில்லை என இந்து சமய அறநிலையத்துறை போலீஸ் மற்றும் மாவட்ட நிர்வாகத்துக்கு கடிதம் அனுப்பியது.

இதையடுத்து, கோவில் நிர்வாகம் சார்பில் 5 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அவற்றை த.வெ.க.வினர் ஒப்புக்கொண்டதன் பின்னர், இந்து சமய அறநிலையத்துறை தடையில்லா சான்று வழங்கியது. இதன் பேரில், ஈரோடு மாவட்ட போலீஸ்துறை 18ஆம் தேதி பொதுக்கூட்டம் நடத்த அனுமதி அளித்தது. தற்போது மைதானம் சீரமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

போலீசார் முன்வைத்த நிபந்தனைகளின் படி, தொண்டர்கள் குறிப்பிட்ட நேரத்துக்குள் மைதானத்துக்கு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொதுக்கூட்டம் காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை இரண்டு மணி நேரம் மட்டுமே நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கூட்டம் நடைபெறும் இடத்தில் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் உள்ளிட்ட அவசர உதவி வசதிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். பெண்கள் பாதுகாப்பாக அமர்ந்து உரையை காணும் வகையில் தனி இடவசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில், கூட்டம் நடைபெறும் இடத்திற்கு அருகிலுள்ள பாரதி மெட்ரிக்குலேஷன் என்ற தனியார் பள்ளி, பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு 18ஆம் தேதி ஒரு நாள் விடுமுறை அறிவித்துள்ளது. அன்று நடைபெற இருந்த தேர்வுகள் 26ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளன என பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.