விசா விண்ணப்பதாரர்களின் சமூக வலைத்தள கணக்குகள் கண்காணிக்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.
வாஷிங்டன்,
அமெரிக்கா ஜனாதிபதியாக டிரம்ப் பொறுப்பேற்றதையடுத்து, சட்டவிரோத குடியேற்றத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியிருப்பவர்களை கைது செய்து நாடுகடத்துவதற்காக, குடியேற்றத்துறையுடன் இணைந்து செயல்படும் தனி அமைச்சரவை குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கு கூடுதலாக, எச்-1பி விசா கட்டணம் இந்திய மதிப்பில் ரூ.90 லட்சம் வரை உயர்த்தப்பட்டிருந்தது. சமீபத்தில் ஆப்கானிஸ்தான், மியான்மர், ஈரான் உள்ளிட்ட 19 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்கா விசாவுக்கு விண்ணப்பிப்பதில் நிரந்தர தடையும் விதிக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது அமெரிக்கா விசாவுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கான புதிய விதிமுறையை அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. அதன் படி, எச்-1பி மற்றும் எச்-4 விசா விண்ணப்பதாரர்கள் தங்களது சமூக வலைத்தளக் கணக்குகளை ‘பொது’ (Public) அமைப்பில் வைத்திருக்க வேண்டும். மேலும், அந்த வலைத்தள கணக்குகள் அமெரிக்க அதிகாரிகளால் கண்காணிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.